Close
நவம்பர் 23, 2024 8:24 காலை

மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியருக்கு நல்லாசிரியர் விருது…!

புதுக்கோட்டை

நல்லாசிரியர் மகேஸ்வரன்

 புதுக்கோட்டையில்   பணியாற்றும் பள்ளிக்கு பெருமை சேர்க்கும் மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர்  மகேஸ்வரன்   ஆசிரியர்  தினத்தில்     டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறுகிறார்.

                                                                                                                              புதுக்கோட்டை அருகில் உள்ள மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஏழை எளிய மாணவர்கள் படிக்கும் இந்த அரசு பள்ளி 2010 -இல் இருந்து விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. ஆசிரியர்களின் கடினமான முயற்சியால் இப்பள்ளி உயர்ந்த நிலைக்கு வந்தது கற்றலில் புதுமை, கற்பித்தலில் இனிமை   என்ற தாரக மந்திரத்தை பயன்படுத்தி கல்வி கற்பிக்கப்படுகிறது. கணினி வழிக் கல்வி, ப்ரொஜெக்டர் மூலம் கற்றல் கற்பித்தல் ,இ- லேர்னிங் முறையில் கற்றல் கற்பித்தல், ஐசிடி முறையில் கற்றல் கற்பித்தல் போன்ற தாரக மந்திரங்களால் பள்ளியின் வளர்ச்சி மேலும் முன்னேறியது .

இதன் காரணமாக தமிழ்நாடு அறிவியல்  இயக்கம் நடத்திய துளிர் விநாடி, வினா போட்டியில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக மண்டல மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. 2016 -ஆம் ஆண்டு துளிர் வினாடி வினா போட்டியில் மாநிலத்தின் முதலிடம் பெற்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தது. 2018 -19 -ஆம் கல்வி ஆண்டுகளில் ஒன்றிய, மாவட்ட, மண்டல மற்றும் மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை .

மேலும் இன்ஸ்பயர் அவார்டு என்னும் புத்தாக்க அறிவியல் ஆய்வு போட்டியில் தொடர்ந்து 12 வருடங்களாக மாநில அளவில் வெற்றி பெற்று சாதனை படைத்தது. குறிப்பாக 2016 புத்தாக்க அறிவியல் ஆய்வு போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்தது.

அப்போது, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக இருந்த  கணேஷ்  மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை நேரடியாக அழைத்து வாழ்த்து தெரிவித்தார். என்.எம்.எம்.எஸ் எனும் தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் தொடர்ந்து 11 ஆண்டுகளாக மாணவர்கள் வெற்றி பெற்று கல்வி உதவித்தொகை பெற்று வருகின்றனர்.

2021 மற்றும் 2022 ஆகிய இரண்டு கல்வி ஆண்டுகளில் திறனாய்வு தேர்வில் மாவட்ட அரசு உயர்நிலை மேல்நிலை நடுநிலைப் பள்ளிகளில் அதிக மாணவர்களை வெற்றி பெற வைத்து மாவட்டத்தில் முதலிடம் பெற்றனர் .இந்த என். எம். எம். எஸ் தேர்வின் மூலம் சுமார் 20 லட்சம் உதவித் தொகையை மாணவர்கள் பெறுவதற்கு வழிவகை செய்தது .

கணினி வழி கல்வி அதாவது டெக்னோ கிளப் போட்டியில் ஒன்றிய மாவட்ட அளவில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் முதலிடம் பெற்றது .மேலும் மாவட்டத்தில் நடந்த அறிவியல் கண்காட்சியில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக மாவட்டத்தில் முதலிடம் பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய துளிர் அறிவியல் திறனாய்வு எழுத்து தேர்வு போட்டியில் தொடர்ந்து ஐந்து வருடங்கள் மாவட்டம் மற்றும் மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தனர். இவர்கள் அனைவருக்கும் விஞ்ஞானிகளை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது .

இவர்கள் அனைவருக்கும் சிறந்த சாதனையாளர்கள் விருதும் தரப்பட்டது. ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான திறனறி தேர்வில் தொடர்ந்து இரண்டு வருடங்கள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர் .மாணவர்களின் சாதனையை பாராட்டி 2016 – 2017-ஆம் கல்வி ஆண்டில் மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான மாநில அரசின் சிறந்த நடுநிலைப் பள்ளிக்கான விருது தமிழக அரசிடமிருந்து பெற்றது.

பள்ளியின் சாதனைகளை பாராட்டி 2016-17 -ஆம் கல்வியாண்டில் மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான காமராஜர் விருதும் பெற்றுள்ளது.

 2016 -17 -ல் புதுகை ஒன்றியத்தில் குறு வள மைய அளவில் நடந்த போட்டியில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்து சாதனை படைத்தது. 2017 -18 -ஆம் கல்வியாண்டில் புதுகை ஒன்றியத்தில் குறுவள மைய அளவில் சிறந்த பள்ளியாக தேர்வு செய்து தமிழக அரசிடம் இருந்து பரிசு பெறப்பட்டது.

2017- 18 கல்வி ஆண்டில் மாவட்டத்தின் தூய்மை பள்ளிக்கான விருதும் இந்த பள்ளிக்கே வழங்கப்பட்டது. 2018 – 19-ஆம் கல்வியாண்டில் நடந்த அறிவியல் மற்றும் கணித கண்காட்சியில் மாவட்டத்தில் முதலிடம் பெற்று மாவட்ட ஆட்சியர்  உமா மகேஸ்வரியிடம் இருந்து பரிசு கிடைத்தது.

2018-19 கல்வியாண்டில் சஹானா டிரஸ்ட் நடத்திய மாநில திறனறித் தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலிடம் பிடித்து ரூ. 7000 -த்துக்கான காசோலை  கிடைத்தது.

பல்வேறு சாதனைகள் புரிந்ததற்காக 2021 – 22 -ஆம் கல்வியாண்டில் குடியரசு தின விழாவில் சிறந்த கல்வி சேவைக்காக இப்பள்ளியின் அறிவியல் ஆசிரியர் மகேஸ்வரன் அவர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு நற்சான்று வழங்கி சிறப்பித்தார் .

தேசிய வருவாய் வழி திறனறி தேர்வு என்.எம்.எம்.எஸ் புத்தகம் எழுதியதற்காக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தன்னுடைய வாழ்த்துகளையும் பரிசும் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

புதுக்கோட்டை

தமிழக பண்பாட்டு கழகம் சிறந்த ஆசிரியர்களுக்கான ராஜ கலைஞன் விருது அறிவியல் ஆசிரியர் மகேஸ்வரனுக்கு வழங்கியது. பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருதை வழங்கி பாராட்டு தெரிவித்தார் .

தேசிய வருவாய் வழி திறனறி தேர்வுக்கான கையேடு எழுதியதற்காக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா, பள்ளிக்கு  நேரில் சென்று  பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தார்.

பல்வேறு சாதனைகளைப் படைத்த இந்த பள்ளிக்கு புதுக்கோட்டை வாசகர் பேரவை  நிறுவனர், பேராசிரியர் சா. விஸ்வநாதன் சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான நூலகப் புத்தகங்களை இலவசமாக வழங்கி அனைத்து ஆசிரியர்களுக்கும் பாராட்டுத் தெரிவித்தார். மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வட்டார கல்வி அலுவலர்கள்  அனைத்து கல்வியாளர்கள் உள்ளாட்சி அமைப்பினர் பாராட்டி உள்ளனர்.

இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் அறிவியல் ஆசிரியர் மகேஸ்வரன்,  தொடர்ந்து பள்ளியின்  மாணவச் செல்வங்களுக்கு கற்பித்தல் பணியை மேற்கொண்டு வருகிறார்.

இவருடைய சேவை மற்றும் கற்பித்தல் திறனை பாராட்டி திருச்சி லயன்ஸ் கிளப் அறிவுச்சசுடர் விருது, இருதயம் புதுக்கோட்டை வர்த்தக சங்கத்தின் சிறந்த கல்வி சேவை விருது, புதுகை அம்பிகா அறக்கட்டளை சிறந்த ஆசிரியருக்கான விருது ,புதுகை பண்பாட்டு கழகம் சிறந்த ஆசிரியர் விருது, இன்டெல் நிறுவனம் சிறந்த அறிவியல் ஆசிரியருக்கான விருது ,நதிகள் அறக்கட்டளையின் சார்பில் தேசத்தின் சிற்பி விருது, புதுக்கோட்டை கட்டிட பொறியாளர்கள் சங்கம் வழங்கிய ஆசிரியர் சேவை செம்மல் விருது,

இன்டெல் நிறுவனம் சிறந்த அறிவியல் ஆசிரியருக்கான விருது, நதிகள் அறக்கட்டளையின் சார்பில் தேசத்தின் சிற்பி விருது, புதுக்கோட்டை கட்டிட  பொறியாளர்கள் வழங்கிய சிறந்த கல்வி சேவைக்கான விருது, புதுக்கோட்டை கவிராஜன் அறக்கட்டளையின் சார்பில் சிறந்த ஆசிரியருக்கான விருது என பல்வேறு விருதுகள் பெற்று பள்ளிக்கும் அந்த கிராமத்திற்கும் பெருமை சேர்த்து வருவது இப்பள்ளிக்கு கூடுதல் சிறப்பாகும்.

இத்தனை சாதனைகள் புரிந்த மகேஸ்வரன் என்னும் பட்டதாரி ஆசிரியருக்கு 2024-25 -ஆம் கல்வியாண்டில் மாநிலத்தின் சிறந்த விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது தமிழக அரசு  ஆசிரியர் தினத்தில்  வழங்குகிறது.

இவருடன் மேலும் 9 ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டுக்கான  டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறுகின்றனர்.தொடக்கக் கல்வித் துறையில் புதுக்கோட்டை அசோக் நகர் பட்டதாரி ஆசிரியர்  பழனிச்சாமி ,டி.இ. எல். சி. நடுநிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் யுனைசி கிறிஸ்டி ஜோதி, திருமயம் காட்டுபாவா பள்ளிவாசல் பட்டதாரி ஆசிரியை வசந்த மலர், அன்னவாசல் நிலையப்பட்டி இடைநிலை ஆசிரியர் கலைவாணி மற்றும்

பள்ளி கல்வித் துறையில் பொன்னகரம் தலைமை ஆசிரியர் இளங்கோவன்,  புதுக்கோட்டை இராணியார் பள்ளி முதுகலை ஆசிரியர் இராஜநாராயணன், நச்சாந்துப்பட்டி உடற்கல்வி ஆசிரியர் ராக்கேஷ், கீரமங்கலம் தலைமை ஆசிரியர் வள்ளி நாயகி, சுனையக்காடு பட்டதாரி ஆசிரியர் ரவி ஆகியோரும் சென்னையில் நடைபெறும் விழாவில், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி கரங்களில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற இருக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top