Close
நவம்பர் 21, 2024 8:29 மணி

அமைச்சர் செந்தில்குமாரை தெரியுமா..?

பதவியேற்ற பின்னர் கவர்னருடன் எடுத்துக்கொண்ட படம்

செந்தில் பாலாஜி, பனைமரத்துப்பட்டி ஆர்.ராஜேந்திரன், டாக்டர் கோவி.செழியன், சா.மு.நாசர் ஆகியோர் அமைச்சரவையில் இணைக்கப்பட்டுள்ளனர். புதிதாக பதவி ஏற்ற அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சக அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

புதிய அமைச்சர்கள் பதவி ஏற்புக்கு பின் ஆளுநருடன் தமிழக அமைச்சரவை குழுவாக புகைப்படம் எடுத்துக்கொண்டது.

செந்தில்குமார் என்கிற செந்தில் பாலாஜி

கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார், அரசியல் ஆர்வம் காரணமாக கல்லூரி படிப்பை பாதியில் விட்டு விட்டு அரசியலில் குதித்தார். 1996ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.

2000வது ஆண்டில் அ.தி.மு.கவில் சேர்ந்த செந்தில் குமார், நியூமராலஜிபடி தனது பெயரை செந்தில் பாலாஜி என மாற்றி விட்டார். 2006 சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க சார்பில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2007ஆம் ஆண்டில் கரூர் மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, ஜெயலலிதா மற்றும் சசிகலா குடும்பத்திற்கு நம்பிக்கைகுரிய நபராக உருவெடுத்தார். 2011 தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்ற செந்தில்பாலாஜிக்கு ஜெயலலிதா போக்குவரத்து துறை அமைச்சர் பதவி வழங்கினார்.

அம்மா குடிநீர், மினி பஸ் திட்டம் மூலம் ஜெயலலிதாவின் குட் புக்கில் இடம் பிடித்த செந்தில் பாலாஜி, பல முறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட போதும் செந்தில் பாலாஜியின் பதவி தப்பியது. ஜெயலலிதா சிறை செல்ல நேர்ந்த போது, ஓபிஎஸ் க்கு இணையாக செந்தில் பாலாஜி பெயரும் பரிசீலனையில் இருந்தது.

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுகவில் பிளவு ஏற்பட்ட போது டிடிவி.தினகரனின் அமமுகவில் இணைந்தார். செந்தில் பாலாஜி உடன் இருந்த போது, ஆர்.கே.நகர் இடைதேர்தலில் டிடிவி தினகரன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதன் பின் அமமுகவில் இருந்து விலகி தாய் கழகமான திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதன் பின் 2021 சட்டமன்ற தேர்தலில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவருக்கு மின்சாரம் மற்றும் மது விலக்கு துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டு சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பின் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி, தற்போது ஜாமினில் வந்த 3வது நாளில் மீண்டும் தான் வகித்து வந்த மின்சாரம் மற்றும் மது விலக்கு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பனமரத்துப்பட்டி ஆர்.ராஜேந்திரன்

சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.ராஜேந்திரன் கல்லூரி காலம் முதலே அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 1985 ல் மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர், 1992 ல் இளைஞரணியின் மாவட்ட அமைப்பாளர் கட்சி பொறுப்புகளை வகித்த இவர் 2006 சட்டமன்ற தேர்தலில் பனைமரத்துப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சேலம் மாவட்ட செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் மறைவுக்கு பின் சேலம் மாவட்ட செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதன் பின் 2016 மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தற்போது சுற்றுலா துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவி. செழியன்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை சேர்ந்த பாரம்பரிய திமுக குடும்பத்தை சேர்ந்தவர் கோவி.செழியன், பள்ளி காலம் முதலே முரசொலி படிப்பது, கல்லூரியில் மாணவர் தேர்தலில் வெற்றி பெற்று சேர்மன் அதன் பின் தலைமை கழக பேச்சாளர் என வளர்ந்துள்ளார்.

கும்பகோணம் அரசினர் ஆடவர் கல்லூரியில் இளங்கலையும், சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் இளங்கலை சட்டமும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ், முதுகலை சமூகவியல் ஆகியவற்றை முடித்த இவர், சென்னை பல்கலைக்கழகத்தில் திமுக தலைவர் மு. கருணாநிதியின் பேச்சு குறித்து ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் 2011, 2016, 2021 என கடந்த 3 தேர்தல்களிலும் வெற்றி பெற்ற இவர் தற்போது உயர்கல்வி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். பள்ளிப்பருவம் முதல் அரசியலில் இருந்தாலும் எளிமையான பின்புலம் கொண்ட கோவி செழியன் சில ஆண்டுகள் முன்பு வரை வாடகை வீட்டிலே வசித்து வந்துள்ளார்

சா.மு.நாசர்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை சேர்ந்த நாசர் 2021 சட்டமன்ற தேர்தலில் ஆவடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவருக்கு பால் வளத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. 2023 அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாசர் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top