ரேசன் கடைகளுடன் இணைந்து வங்கிச் சேவைகளையும் சாதாரண மக்களுக்கு வழங்கும் வகையில் புதியத் திட்டம் ஒன்றை தமிழகத்தில் நடைமுறைப் படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
அரசு வழங்கும் ஓய்வூதியங்கள், பொங்கல் பரிசு போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு வருவது நாம் அறிந்ததே. இவ்வாறு வரவு வைக்கப்படும் பணத்தை பயனாளிகள் தங்கள் கணக்கில் இருந்து டெபிட் கார்டுகள் மூலம் ஏ.டி.எம்.களில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்பதும் நாம் அறிந்த விஷயம்.
ஆனால் தமிழகத்தில் இன்னும் பல தொலைதூர கிராமங்களில், மலைப் பகுதி கிராமங்களிலும் ஏ.டி.எம் வசதி இல்லை. எனவே, அப்பகுதி மக்கள் வங்கிச்சேவைகளை எளிதில் பெற முடியவில்லை.
2014ம் ஆண்டுமுதல் முதல் தமிழக அரசால் வழங்கப்பட்டுவரும் பொங்கல் பரிசுத்தொகை சுமார் 33 ஆயிரம் ரேசன் கடைகள் மூலமாக எவ்வித சிரமமும் இன்றி வழங்கப்பட்டு வருகிறது. 5 ஆயிரத்து 604 கோடி பணம் இதன் மூலமாக விநியோகிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறைதான் தமிழக அரசுக்கு ஒரு புதிய திட்டத்தை கொண்டுவர வாய்ப்பாக அமைந்துள்ளது எனலாம். அந்தவகையில் தற்போது வங்கி ஏ.டி.எம்.சேவைகளை எளிதில் பெறமுடியாத கிராமப்புற மக்களுக்கு உதவுவதற்காக ரேசன் கடைகளை டிஜிட்டல் முறையில் பணப்பட்டுவாடா செய்யும் மைக்ரோ ஏ.டி.எம். களாக மாற்றுவதற்கான பூர்வங்கப்பணிகள் தொடங்கி இருக்கிறது.
இந்த புதிய திட்டம் குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் கூறும் போது, ஏற்கனவே தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 4,500 அலகுகளில் 3,500 அலகுகள் மைக்ரோ ஏ.டி.எம்.களாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன என்பதையும் கூறினார்.
ரேசன் கடைகள் மைக்ரோ ஏ.டி.எம்.களாக மாறும்போது ஆதார் எண் அடிப்படையில் ஆயிரம் ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும்.
அரசின் புள்ளி விவரம்படி 34 லட்சம் பேர் முதியோர் உதவித்தொகை மாதம் ரூ.1000 பெறுகிறார்கள். அவர்களில் 2.7 லட்சம் பேர் வங்கி மற்றும் அஞ்சல் நிலையங்கள் வழியாக பணத்தை பெற்று வருகிறார்கள். அவர்களால் ஏ.டி.எம்.களை பயன்படுத்த முடியாத சொல்லலில் உள்ளனர்.
இந்த பயனாளிகள் இணையதள இணைப்புகள் கிடைப்பதில் ஏற்படும் சிக்கல்கள், அதேபோல் கையடக்க கருவிகளில் பயோ மெட்ரிக் அங்கீகாரத்தை பெறுவதில் ஏற்படும் சிக்கல்கள் போன்ற சிரமங்களை எதிர்கொள்கிறார்கள்.
எனவே இந்த புதிய நடைமுறை மூலமாக கிராமப்புற மக்களும் ரேசன் கடை ஏ.டி.எம்.கள் வழியாக பண சேவையை பெற முடியும்.