Close
அக்டோபர் 3, 2024 6:32 காலை

நாமக்கல்லில் 58 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை வழக்குப்பதிவு

நாமக்கல் மாவட்டம் முழுவதும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு விடுமுறை அளிக்காத 58 தொழில் நிறுவனங்கள் மீது, தொழிலாளர் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். அவ்வாறு விடுமுறை அளிக்கவில்லையெனில் 3 தினங்களுக்குள் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். அல்லது அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும்.

இதுதொடர்பாக முன்கூட்டியே தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் அதற்குரிய படிவம் பூர்த்தி செய்து அனுமதி பெற வேண்டும் என்பது விதிமுறையாகும். இவ்விதிமுறை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது தொடர்பாக நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சேலம் மாவட்டம் சங்ககிரி ஆகிய பகுதிகளில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

இதன்படி ஹோட்டல்கள், வாகன பழுது பார்க்கும் பட்டறை உள்ளிட்ட மொத்தம் 67 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 58 நிறுவனத்தினர் மேற்குறிப்பிட்ட விதிமுறையை பின்பற்றாமல் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து 58 நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) முத்து தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top