Close
நவம்பர் 21, 2024 8:36 மணி

இன்னிக்கு எங்கெல்லாம் மழை கொட்டப்போகுது..? தெரிஞ்சிக்கோங்க..!

மழை -கோப்பு படம்

விருதுநகர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர் உட்பட தமிழ்நாட்டில் பிற பகுதிகளிலும் நேற்று கனமழை பெய்தது.சிவகாசியில் மின்னல் தாக்கி பட்டாசு கடையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. .

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கனமழை கொட்டியது. இதனால், சிவகாசியின் முக்கிய இடமான என்.ஆர்.கே.ஆர் சாலையில் மழைநீர் தேங்கி குளம்போல ஆகிவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர். .

சிவகாசி – விளாம்பட்டி சாலையில் உள்ள ஒத்தபுளி என்ற இடத்தில் உள்ள பட்டாசுக் கடை மீது மின்னல் தாக்கியதால் கடையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் தீப்பிடித்து வெடிக்கத்தொடங்கின. இதனால், பட்டாசு கடை இடிந்து தரைமட்டமானது. கடாயில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சாம்பலானது.

இதேபோல புதுக்கோட்டை நகரப்பகுதிகள் மற்றும் கந்தர்வகோட்டை, புனல்குளம், கடவராயன்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது.

திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, சேரன்குலம், கோட்டூர், நீடாமங்கலம் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை நகரப் பகுதிகள், மற்றும் அதைச் சுற்றியுள்ள கீழ்பெண்ணாத்தூர், தண்டராம்பட்டு, வேங்கிக்கால், ஏந்தல் உள்ளிட்ட இடங்களில் கன மழை பெய்தது.

அரியலூரில் கொட்டித்தீர்த்த கனமழையால் பெரிய அரண்மனை தெருவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. குறிப்பாக அரியலூர் நகராட்சிக்கு சொந்தமான ஒற்றுமைத் திடலில் மழை நீர் சூழ்ந்து குளம் போலானது. இதில் திடலில் இருந்த மேடையின் பக்கவாட்டுச் சுவர் இடிந்து விழுந்தது. அருகில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை.

இதே போல, பெரம்பலூர் மற்றும் குன்னம், வேப்பூர், அன்னமங்கலம், லப்பைகுடிக்காடு உள்ளிட்ட மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. .

மேலும், பெரம்பலூர் மாவட்டம் பெருமத்தூர் அருகே உள்ள நல்லூரில் மின்னல் தாக்கி பசு ஒன்று உயிரிழந்தது.

அதேபோல் கொடைக்கானலில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழையால், கொடைக்கானல் வெள்ளிநீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

தேனி மற்றும் அல்லிநகரம், அன்னஞ்சி, அரண்மனைப் புதூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மிதமான மழை பெய்தது.

இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை அறிவிப்பு

தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. குறிப்பாக, திருப்பூர், கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களிலும் மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யலாம் என்று கூறியுள்ளது.

சென்னையில் வெப்பம் குறைவாக இருக்கும் எனவும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது. மேலும், வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top