Close
நவம்பர் 1, 2024 12:33 மணி

அடுத்த 24 மணிநேரத்தில் அதி கனமழை : இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

மழை-கோப்பு படம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அடுத்த 24 மணி நேரத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தின் வானிலை நிலவரம் தொடர்பாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறும்போது, “இந்த காலகட்டத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 94 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.

தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. அது மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. தொடர்ந்து மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை அதிகாலை வடதமிழகம், புதுவைக்கும் – நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகே கரையை கடக்கலாம்.

இதன்காரணமாக, அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் கடலில் தான் இருக்கிறது. இன்னும் வலுவிழக்கவில்லை. கரையை நோக்கி வருகிறது.

நாளை காலை கரைக்கு அருகில் வரும்போது மழை பெய்ய வாய்ப்பு இருக்கக்கூடிய காரணத்தைக் கருத்தில் கொண்டு, ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால், ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ரெட் அலர்ட் என்பது எல்லா இடங்களிலும் 20 செ.மீ மழை பெய்யும் என்று அர்த்தமில்லை. மழைக்காலங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

பெய்யும் மழைக்கு மட்டுமல்ல, அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டுதான் ரெட் அலர்ட் அலலது ஆரஞ்சு அலர்ட் போன்றவை விடுக்கப்படுகிறது” என்று விளக்கமளித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top