வரும் அக்டோபர் மாதம் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை நாடுமுழுவதும் கொண்டாடப்படுகிறது. அதற்கு மறுநாள் நவம்பர் முதல் தேதி வெள்ளிக்கிழமை. நவம்பர் 2ம் தேதி சனிக்கிழமை, நவம்பர் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. இடையில் ஒரு நாள் மட்டும் வெள்ளிக்கிழமை அலுவலகம் இயங்கினால், தீபாவளிக்கு வெளியூர் சென்று திரும்புபவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படும்.
அதேநேரம் தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை கொடுத்தால், தொடர்ந்து நான்கு நாள் விடுமுறை கிடைக்கும். இதன் மூலம் தீபாவளி பண்டிகை கொண்டாட நீண்ட துாரம் பயணிப்பவர்களுக்கு மிகுந்த வசதி ஏற்படும்.
எனவே, தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை விடப்பட வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பில் இருந்தும் எழுந்தன. வழக்கம் போல் அரசு இந்த கோரிக்கைகளை பரிசீலித்தது. இது தொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பல்வேறு தரப்பு அரசு பணியாளர்கள் கோரிக்கையினை ஏற்று தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் முதல் தேதி வெள்ளிக்கிழமை அன்று அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அனைத்திற்கும் அரசு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதனை ஈடு செய்யும் வகையில், வரும் நவம்பர் 9ம் தேதி சனிக்கிழமை பணிநாளாக அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.