வழக்கிலிருந்து விடுவிக்க தலா 7000 ரூபாய் லஞ்சம் கேட்ட உதவி ஆய்வாளர் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சித்துக்காடு பகுதியில் மது போதையில் தகராறில் ஈடுபட்டவர்களை வழக்கிலிருந்து விடுவிக்க லஞ்சம் கேட்கும் வெள்ளவேடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், சித்துக்காடு பகுதியில் கடந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை (13 -10-24 ) இந்திராணி என்பவரின் வீட்டின் அருகே அதே பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ், டில்லி பாபு, சுந்தரராஜன், மாரியப்பன் ஆகிய நான்கு இளைஞர்கள் மது அருந்தி உள்ளனர்.
மது அருந்திக்கொண்டிருக்கும்போது அவர்கள் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகளை முகம் சுளிக்கும் வகையில் தரமற்ற வார்த்தைகளை பேசியுள்ளனர். அதை தட்டிக் கேட்ட அதே பகுதியைச் சேர்ந்த இந்திராணி என்ற பெண்ணிடம் வாய்த்தராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இது தொடர்பாக எழுந்த பிரச்னையில் மது அருந்தியவர்கள் வந்த இருசக்கர வாகனத்தை இந்திராணியின் மகன் எடுத்து கொண்டு பைக்கை திருப்பித்தர மறுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் அவர்கள் மீண்டும் இந்திராணி குடும்பத்தினரிடம் தகராறு செய்துள்ளனர். இந்திராணி அந்த 4 பேர் மீது புகார் அளித்ததால் வெள்ளவேடு போலீசார் அந்த நான்கு பேரையும் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது புகார் அளித்த பெண்மணி பிரச்னை செய்தவர்கள் அதே ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் என்பதால் அவர்கள் மன்னிப்பு மட்டும் கேட்டுவிட்டு விடுவிக்குமாறும் அவர்கள் மீது மேல் நடவடிக்கை வேண்டாம் எனவும் இந்திராணி எழுதிக் கொடுத்துவிட்டார்.
ஆனால் அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் சட்ட ஒழுங்கு உதவி காவல் ஆய்வாளர் ரஞ்சித்குமார் 4 பேரிடமும் வழக்கிலிருந்து விடுவிக்க தலா 7000 ரூபாய் பணம் தரவேண்டும் என்று அவர் லஞ்சம் கேட்டுள்ளார். அவர் குறிப்பாக மாரியப்பன் என்பவரிடம் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. அவ்வாறு அவர் லஞ்சம் கேட்டு பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.