தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகமாகி வருவதால் மருத்துவத்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அந்த இடங்களை கண்காணிக்க துறை சார்ந்த மாவட்ட இணை இயக்குநர்களுக்கு, தமிழக மருத்துவத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை 20,000க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் சென்னை, கிருஷ்ணகிரி, கோவை, தேனி, தஞ்சை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் தரவுகள் அடிப்படையில் டெங்கு கொசு உற்பத்தி இடங்களை தமிழ்நாடு பொது சுகாதாரத்துறையின் ஆய்வகப்பிரிவு மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அதன்படி, தமிழகத்தில் 120 இடங்களில், டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்காணிக்க மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது.
பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில், நகராட்சி, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு உற்பத்தியை தீவிரமாக கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அந்தந்த மாவட்ட இணை இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
பொது மக்களும் தங்கள் வீடுகளைச் சேற்றிலும் தூய்மையாக வைத்துக்கொள்வதுடன் தண்ணீர் சேராமல் இருக்கும்விதமாக குவிந்த பழைய பொருட்கள் போன்றவைகளை அப்புறப்படுத்தி வைக்கவேண்டும். கொசுக்கள் முட்டை இடுவதற்கு வசதியாக நாமே அதற்கு வழிவகுக்கக்கூடாது. நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள சில அடிப்படை சுகாதார முறைகளை பின்பற்றினால் டெங்கு பரவலை கட்டுப்படுத்திவிடலாம்.