Close
நவம்பர் 21, 2024 5:37 மணி

ஆதரவற்ற குழந்தைகளை பராமரிக்க வளர்ப்பு பெற்றோர்கள் தேவை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குழந்தைகள் இல்லங்களில் உள்ள 6-18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வளர்ப்பதற்கு வளர்ப்புப் பெற்றோர்கள் தேவை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய அரசின் மிசன் வட்சல்யா திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தற்காலிக பராமரிப்புக்கான (Foster Care) வழிகாட்டு நெறிமுறைகள் 2024-ன்படி இளைஞர் நீதி சட்டம் 2015-ன்கீழ் பதிவு பெற்ற குழந்தைகள் இல்லங்களில் உள்ள 6-18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில், பெற்றோர்/ பாதுகாவலர்கள் இல்லாத குழந்தைகள், பெற்றோர்/ பாதுகாவலர்கள் வருடங்களுக்கு மேல் பார்க்கவராத குழந்தைகள், தீராத நோயினால் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர்களால் பராமரிப்பு செய்ய இயலாத நிலையில் உள்ள குழந்தைகள், சிறையில் உள்ள பெற்றோர்களின் குழந்தைகளை குடும்பச் சூழலில் வளர்ப்பதற்கு வளர்ப்பு பெற்றோர்கள் (Prospective Foster Parent)
தேவைப்படுகின்றார்கள்.

விருப்பம் உள்ள வளர்ப்பு பெற்றோர் 6-12 வயது உள்ள குழந்தைகளை வளர்க்க – கணவன் மனைவி கூட்டு வயது 70 – 110 வயது வரையும், ஒற்றை பெற்றோர் 35-55 வயது வரையும் மற்றும் 12-18 வயது உள்ள குழந்தைகளை வளர்க்க – கணவன் மனைவி கூட்டு வயது 70 – 115 வயது வரையும், ஒற்றை பெற்றோர் 35 – 60 வயது வரையும் இருக்க வேண்டும்.

மேலும் வளர்ப்பு பெற்றோர் என்பவர்கள் ஒற்றை பெற்றோர், திருமணம் ஆகாதோர், கணவன் மற்றும் மனைவியை இழந்தவர்கள், விவாகரத்தானோர் தத்தெடுப்புக்கு பதிவு செய்து காத்திருப்போர்களாக இருப்பவர்கள் மற்றும் குழந்தை இல்லாதவர்கள் என உரிய நடைமுறைகளை பின்பற்றி வளர்ப்பு பராமரிப்பில் குழந்தைகளை வளர்க்கலாம்.

தற்காலிக பராமரிப்பு திட்டத்தில் பெற்றோர்களால், பாதுகாவலர்களால் பராமரிப்பு செய்ய இயலாத நிலையில் உள்ள குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் இன்றி தவிக்கும் குழந்தைகளை குழந்தை நல குழுமத்தின் உத்தரவின் பேரில் குறுகிய காலம் அல்லது நீண்ட காலம் என தேவை/ சூழ்நிலைக்கு ஏற்ப வளர்ப்பு பெற்றோருடன் இருக்க அனுமதி வழங்கப்படும்.

ஆதரவற்ற குழந்தைகளை தற்காலிக குடும்ப சூழல்களில் வாழ வழிவகை செய்ய விருப்பம் தெரிவிக்கும் பெற்றோர் விண்ணப்பம் செய்தலுக்கான வழிமுறைகள், நடைமுறை நிபந்தனைகளை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்: 39/40, SMG இல்லம், கிரிஜா முருகன் மருத்துவமனை பின்புறம், நேப்பால் தெரு, கள்ளக்குறிச்சி 606202. தொலைபேசி எண் – 04151 225600, 6369107620, dcpukkr@gmail.com என்ற இமெயில் முகவரியில் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலத்தை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top