Close
நவம்பர் 14, 2024 8:58 மணி

மருத்துவர் மீது கத்திக்குத்து : மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்..!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன்- கோப்பு படம்

சென்னையில் மருத்துவர் மீது நடத்தப்பட்ட கத்திக்குத்து சம்பவத்தைத்தொடர்ந்து மருத்துவர்கள் அத்தியாவசிய சிகிச்சைகள் தவிர மற்ற சிகிச்சைகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த பிரேமா.என்பவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்ததாக தெரிகிறது. இதற்காக அவர் சில காலமாக கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரியவந்துள்ளது..

இந்நிலையில், நேற்று (13ம் தேதி) காலை பிரேமாவின் மகன் விக்னேஷ் கிண்டி அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அங்கு புற்றுநோய் பிரிவில் இருந்த மருத்துவர் பாலாஜியை அவர் மறைத்துவைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், பாலாஜி நிலை தடுமாறி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.

மருத்துவரை கத்தியால் குத்திவிட்டு மிகச் சாதாரணமாக விக்னேஷ் மருத்துமனையை விட்டு வெளியேற முற்பட்டார். அப்போது மருத்துவமனையில் இருந்த சக மருத்துவர்கள், மருத்துவமனை பாதுகாப்புக் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து அவரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் விக்னேஷை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேசமயம், கத்தி குத்துக்கு உள்ளான மருத்துவர் பாலாஜி உடனடியாக அதே மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே அரசு மருத்துவர் பணி நேரத்தில் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், அரசு மருத்துவர்களுக்கு பணியிடத்தில் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் மருத்துவ சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தது.

இதையடுத்து அரசு தரப்பில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவச் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில், மருத்துவர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

மருத்துவ சங்கத்தினருடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு அமைச்சர் மா. சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்

“நோயாளிகளுடன் வரும் உதவியாளர்கள் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என்று மருத்துவ சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.அதனைக்கருத்தில் கொண்டு நோயாளியுடன் வருபவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டம் அனைத்து மருத்துவமனைகளிலும் தொடங்கப்பட உள்ளது” என்று தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top