தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது. இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் சென்னையில் நேற்று லேசான மழை பெய்தது. அதேவேளை புறநகர்ப் பகுதிகளான குன்றத்தூர், மாங்காடு, சிறுகளத்தூர், மலையம்பாக்கம், சிக்கிராயபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலையில் பரவலாக ஆங்காங்கு மழை பெய்தது. இதனால், பள்ளி முடிந்து மாணவ, மாணவிகள் வீடுகளுக்குச் செல்வதற்கு பெரும் பாடுபட்டனர். அவர்கள் மழையில் நனைந்தபடி வீடுகளுக்குச் சென்றனர்.
சென்னை OMR சாலை, ECR சாலை, பள்ளிக்கரணை, வேளச்சேரி, தரமணி போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் விட்டுவிட்டு கனமழை பெய்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று காலை முதலே சாரல் மழை பெய்தது. பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று திரும்பிய மாணவர்கள் சாரல் மழையில் நனைந்தபடி சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்ததால், சீர்காழி அருகே எடமணல் ஊராட்சியில் உள்ள அப்துல் கலாம் நகரில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளைத் தண்ணீர் சூழ்ந்தது. மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் அந்த பகுதிகளை ஆய்வுசெய்தார். மேலும், மழைநீரை தேங்காமல் வெளியேற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
திருவாரூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்றும் கனமழை பெய்தது. திருவாரூர், வாளவாய்க்கால், சேந்தமங்கலம், கொடிக்கால்பாளையம் உட்பட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.
நெல்லையில் மாநகர் பகுதிகளான கே.டி.சி. நகர், மகாராஜ் நகர்போன்ற பகுதிகளிலும், ஏர்வாடி, வள்ளியூர், மூலைக்கரைப்பட்டி, ரெட்டியார்பட்டி போன்ற புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால், சாலைகளில் குளம்போல் வெள்ளநீர் தேங்கியது.
இந்த நிலையில், இன்று 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.