ராபி பருவத்தில் விவசாயிகள் பயிரிட மானிய விலையில் மணிலா விதை வழங்கப்படுவதாக விருத்தாசலம் வேளாண் இயக்குனர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டாரத்தில் ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் (ராபி பருவம்) மணிலா சாகுபடி செய்திட சரியான தருணமாகும். ராபி பருவத்தில் மணிலா 600 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
தற்போது விருத்தாசலம் மற்றும் மங்கலம்பேட்டை வேளாண் விரிவாக்க மையங்களில் சான்று பெற்ற வி.ஆர்.ஐ.10, ஜிஜி34, ஆகிய மணிலா விதை ரகங்கள் போதுமான அளவு இருப்பில் உள்ளது. விதை கிராம திட்டத்தில் ரூ.36 கிலோவுக்கு மானியம் மற்றும் தேசிய எண்ணெய் வித்து இயக்கம் மூலம் ரூ.40 கிலோவுக்கு மானியத்தில் சான்று பெற்ற மணிலா விதைகள் வழங்கப்படுகிறது.
விவசாயிகள் தங்களது நிலத்தின் சிட்டா நகல், ஆதார் எண், வங்கிக் கணக்கு ஆகிய ஆவணங்களுடன் வந்து விதைகளை பெற்று பயன் பெறலாம்.
மேலும் விதைப்பண்ணைகள் அமைத்திட விருப்பம் உள்ள விவசாயிகள் வேளாண் துறை அலுவலகத்தில் தாங்கள் விதைப்பண்ணையை பதிவு செய்து, மீண்டும் தரமான விதைகளை வழங்கினால் தங்களுக்கு அன்றைய மார்க்கெட் விலையுடன் தேசிய எண்ணெய் வித்து இயக்கத்தின் கீழ் உற்பத்தி மானியமாக கிலோ ஒன்றிற்கு ரூ.25 வழங்கப்படும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு விருத்தாசலம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.