தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் நல்லூர் கிராமத்தில் பட்டியிலின மக்கள் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் அனைவரும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். மேலும் விவசாயம் செய்ய நிலமின்றி கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டது. இந்த வீடுகள் தற்போது சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இந்நிலையில் பலர் திருமணமாகி ஒரே வீட்டை தடுத்து இரண்டு மூன்று குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இதேபோன்று, பாலக்கோடு வட்டம் கரிகுட்டனூர் கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட இருளர் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். குடிசை அமைத்து வசித்துவரும் இம்மக்கள் மழை காலங்களில் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுவரை எங்களுக்கு அரசு வீடோ அல்லது இலவச வீட்டு மனை பட்டாவோ வழங்கவில்லை. எனவே எங்கள் வாழ் நிலையை கருத்தில் கொண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்கவேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கரிகுட்டனூர் மக்கள் மனு அளித்துள்ளனர்.