பொதுவாகவே பெற்றோர் தங்களது மகள் அல்லது மகனுக்கு சரியான வயதில் திருமணம் நடந்துவிடவேண்டும் என்று எண்ணுவது இயல்பான ஒன்று. ஆனால் சிலருக்கு ஜாதகத்தில் தோஷம் இருந்தால் திருமணம் தள்ளிப்போகும் என்பார்கள். அவ்வாறு தோஷம் இருப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் தோஷம் நீக்கும் பரிகார ஆலயங்கள் உள்ளன.
அவ்வாறு திருமண தோஷம் நீக்கும் ஆலயங்களை இந்த பதிவில் காணலாம் வாங்க.
திருமண தாமதத்திற்கு காரணம் என்ன?
ஜாதகத்தில் மாங்கல்ய தோஷம், சப்தமேஷ தோஷம், வியாழ தோஷம், ஜாதகத்தில் சுக்கிர தோஷம் அல்லது நவாம்ச தோஷம், ராகு கேது தோஷம் போன்றவை திருமணம் ஆவதில் இருந்து தாமதத்தை ஏற்படுத்தும். இந்த தோஷங்களை போக்க பெரிதாக நாம் ஒன்றும் செலவு செய்யத் தேவையில்லை.
பிரச்னை என்று ஒன்று இருந்தால் நிச்சயம் அதற்கு தீர்வு என்று ஒன்று இருக்கும். அதேபோலவே ஒவ்வொரு தோஷத்திற்கும் ஜோதிடத்தில் ஒரு தீர்வும் உண்டு என்பதை நாம் அறிதல் அவசியம்.
ஒரு பிரச்சனை என்றால், அதற்கு ஒரு தீர்வு இருக்க வேண்டும். எனவே விரைவில் திருமணம் செய்து கொள்ள என்னென்ன வழிகள் உள்ளன என்பதை தெரிந்து கொள்வதும் அவசியமாகும். திருமண தடைகளுக்கு இந்த கோயில்களில் வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
திருமண தடை நீங்க தரிசனம் செய்ய வேண்டிய கோயில்கள் :
காளஹஸ்தி திருக்கோயில்
தஞ்சை மாவட்டம், கத்திரிநத்தம் என்ற சிறிய கிராமத்தில் காளஹஸ்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் திங்கட்கிழமை பக்தர்கள் கூட்டம் அலைமோதும்..
ராகு காலத்தில் காலை 7.30 மணி முதல் 9 மணி வரை சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. திருமணம் செய்து கொள்ள விரும்பும் மணமகள், மணமகனின் பெற்றோர் சார்பில் அர்ச்சனை தட்டில் சம்பந்தப்பட்டவர்களின் ஜாதகத்தை வைத்து அர்ச்சனை செய்வார்கள். இப்படி செய்தால் மூன்றே மாதத்தில் மணமகனுக்கு திருமணம் நடந்துவிடும் என்று பயனடைந்த பக்தர்கள் மகிழ்ச்சியோடு கூறுகிறார்கள். இங்கு தமிழகம் முழுவதும் இருந்து திருமண தடை நீங்க பக்தர்கள் வந்து வழிபாடு செய்வது வழக்கம்.
காளஹஸ்திக்கு எப்படி செல்லலாம்?
கத்திரிநத்தம் திருத்தலம் தஞ்சாவூரில் இருந்து 8 கி.மீ தொலைவிலும், புன்னை நல்லூர் மாரியம்மன் கோயி\லில் இருந்து 2 கி.மீ தொலைவிலும் உள்ளது.
திருமணஞ்சேரி
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருமணஞ்சேரி என்ற ஊரில் அருளும் ஸ்ரீ உத்வாகநாதர் சுவாமி கோயில் மிகவும் பழமையான கோயிலாகும். புராணத்தின்படி, பார்வதி தேவி பூமியில் சிவனை மணக்க விரும்பி தவம் செய்து திருமணஞ்சேரி என்ற இந்த இடத்தில் சிவனை மணந்ததாக கூறுகிறது.
திருமணஞ்சேரி கோயிலில் திருமணம் செய்ய விரும்புவோர், ஒரு சுப முகூர்த்த நாளில் திருமணஞ்சேரி கோயிலுக்குச் செல்ல வேண்டும். திருமணத்தில் தடை உள்ளவர்கள் திருமணஞ்சேரி வந்து பிரார்த்தனை செய்தால் தடைகள் விரைவில் நீங்கி திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்..
நித்ய கல்யாணப்பெருமாள் கோயில்
நித்ய கல்யாணப்பெருமாள் சுவாமி, விரைவில் திருமணத்திற்கு வரங்களை வழங்கும் தெய்வமாக அறியப்படுகிறார். திருமணத்தில் தாமதம் ஏற்படுபவர்கள் இந்த ஆலயம் சென்று வழிபாட்டு வந்தால் திருமண தடை நீங்கும்.
சென்னையில் இருந்து மகாபலிபுரம் செல்லும் கிழக்குக் கடற்கரை சாலையில் 45 நிமிட தூரத்தில் உள்ள திருவிடந்தையில் நித்ய கல்யாணப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. நித்ய கல்யாணப்பெருமாளை தரிசித்தால் திருமண தடைகள் விலகி திருமணம் நடக்கும் என்பார்கள். விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்றால், நித்ய கல்யாணப் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்து வாருங்கள்.
இக்கோயிலில் தெய்வங்களுக்கு கல்யாணோத்ஸவம் நடத்தினால், வழிபடுபவர்கள் தங்கள் விரும்பிய வரனே அமையும். அவர்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளலாம்.
தென் திருப்பதியில் உப்பிலியப்பன் கோயில்
கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ தொலைவில் உள்ள திருவிண்ணைநகரில், விஷ்ணு கோகிலாம்பையை மணந்து திருமண வரம் அளித்து வருகிறார். பக்தர்கள் மத்தியில் உள்ள பரவலான நம்பிக்கையின்படி, இந்த கோயிலுக்குச் சென்று வந்தால் திருமண தடை நீங்குவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
இந்த கோயிலுக்குச் சென்றால் உங்கள் திருமணத் தடைகளை நீக்கி விரைவில் திருமணம் நடப்பதற்கு இங்கு ஒரு வேத சடங்கு செய்யப்படுகிறது. மேலும் பக்தர்களுக்கு விரைவில் திருமணம் மற்றும் நல்லிணக்கத்தை வழங்க ஆசீர்வாதம் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக கிடைக்கும் நம்பிக்கையால் நீங்கள் வளமாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள்.
மங்களாம்பிகை சமேத மாங்கல்யேஸ்வரர் கோயில்
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள எடையத்துமங்கலம் கிராமத்தில் மாங்கல்ய மகரிஷியால் திருமண வரம் பெற்ற மங்களாம்பிகை சமேத மாங்கல்யேஸ்வரர் கோயில் உள்ளது. திருமணம் சார்ந்த எந்த தடைகளும், இந்த தெய்வங்களுக்கு பூஜை செய்வதன் மூலமாக தானாகவே மறைந்துவிடும் என்று கூறுகின்றனர்.
கல்யாண வெங்கடேஸ்வர ஸ்ரீனிவாச ஸ்வாமி கோயில்
திருமணம் தொடர்பான தோஷங்கள் மற்றும் பிரச்சினைகள் விலக, திருப்பதிக்கு அருகில் உள்ள சீனிவாச மங்காபுரம் எனும் கிராமத்தில் இருக்கும் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலுக்கு செல்ல வேண்டும். திருமண பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் இந்தக் கோயிலில் பிரார்த்தனை செய்வதன் மூலம் தடைகளிலிருந்து விடுபடலாம் என்ற நம்பிக்கை நிலவி வருகிறது.
இதுக்குத்தாங்க பெரியவங்க நம்பிக்கைதான் வாழ்க்கை என்பார்கள். நம்பிக்கையோடு செய்யும் எந்த காரியமும் வெற்றியில்தான் முடியும். மேலே கூறப்பட்டுள்ள ஏதோ ஒரு கோயிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்யுங்கள். திருமண வாழ்க்கையை மகிழ்ச்சியோடு தொடங்குங்கள்.