காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் திருக்கோயில் தலை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர பக்தர்கள் மண்டை விளக்கு பூஜை மேற்கொண்டு இறையருள் பெற்றனர்.
கோயில் நகரம் எனக் கூறப்படும் காஞ்சிபுரத்தில் பல்வேறு பரிகார தலங்கள் அமைந்துள்ளது. இதுபோன்ற பரிகார தலங்களுக்கு பக்தர்கள் குடும்பத்துடன் வந்து வழிபட்டு இறையருள் பெற்று சென்று வருகின்றனர்.
அவ்வகையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள கட்சபேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை மாதம் வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் பக்தர்கள் மண்டை விளக்கு பூஜை என கூறப்படும் தலை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர மா விளக்கு போட்டு சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள் மேற்கொண்டு இறையருள் பெற்றனர்.
இப்பூஜையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மண்சட்டியால் ஆன பாத்திரத்தில் அரிசி மாவு கொண்டு மாவிளக்கு செய்து அதில் நெய் விளக்கு ஏற்றி திருக்கோயிலை வலம் வந்து மூலவர் கச்சபேஸ்வரரை நோய்கள் தீர வேண்டி வணங்கி சென்றனர்.
இதில் பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் காலை 9 மணி முதலே தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தி வருகின்றனர்.