Close
ஏப்ரல் 3, 2025 12:33 மணி

கல்யாண மாப்பிள்ளை வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை கொள்ளை

உத்திரமேரூர் அருகே மாப்பிள்ளை வீட்டார் மண்டபத்தில் இருந்த நேரத்தில் கொள்ளையர்கள் மாப்பிள்ளை வீட்டில் புகுந்து 10 சவரன் தங்க நகை மற்றும் 10,000 ரூபாய் ரொக்கம்,வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவையை கொள்ளையடித்து சென்றது குறித்து சாலவாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பேரணக்காவூர் கிராமத்தை சேர்ந்த ராஜி என்பவரின் மகன் கார்த்திகேயன். இவருக்கும் திருக்கழுக்குன்றம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இன்று செங்கல்பட்டு  அருகே உள்ள மாமண்டூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் நடைப்பெற்றது.

இந்த நிலையில் நேற்று மாப்பிள்ளை வீட்டார் மற்றும் கிராம மக்கள் திருமண மண்டபத்தில் இருந்த நேரத்தில் கொள்ளையர்கள் மாப்பிள்ளை கார்த்திகேயன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 10 சவரன் தங்க நகை மற்றும் 10,000 ரூபாய் ரொக்கம், வெள்ளி பொருட்கள் உள்ளிட்டவை கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக கிராம மக்கள் போலீஸாரின் இலவச சேவை எண்ணான 100க்கு தகவல் கொடுத்ததின் பேரில் சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து கொள்ளையர்கள் குறித்து தடயங்கள் சேகரிக்க கைரேகை நிபுணர்கள் வரவைத்து மோப்ப நாய் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து செய்தியாளர்கள் மாப்பிள்ளை வீட்டார் இடம் கேட்கும் போது இப்போது தான் கல்யாணம் நடைபெற்று பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டிற்கு வர இருக்கும் நிலையில் இந்த கொள்ளை சம்பவம் பெண் வீட்டிற்கு தெரிந்தால் அவர்கள் மனது சங்கடப்படகூடும் என்ற காரணத்தால் மாப்பிள்ளை வீட்டார் முறையான தகவல் அளிக்க மறுத்து விட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top