காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே இளநகர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் கால்நடை மருத்துவச் சிகிச்சை மற்றும் பராமரிப்பு முகாம் நடைபெற்றது.
அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே இளநகர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு கடன் சங்கத்தின் சார்பில் கால்நடை சிகிச்சை மற்றும் பராமரிப்பு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் செயலாளர் பிரேம்குமார் தலைமை வகித்து கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு தாது உப்புக் கரைசல் பாக்கெட்டுகள் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான மாத்திரைகளையும் வழங்கினார்.
காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு ஒன்றியத்தின் மேலாளர் முரளி, இளநகர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர் சிவானந்தம், கால்நடைமருத்துவ ஆய்வாளர் லட்சுமிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.
இளநகர் கால்நடை மருத்துவர் மாலதி கலந்து கொண்டு கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம், மலடு நீக்கு சீகிச்சை, குடல் பரிசோதனை, வளர்ப்பு நாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி, கோழிக்கழிச்சல் தடுப்பூசி, பசுமாடுகளுக்கு சினைப் பரிசோதனை உள்ளிட்ட சிகிச்சைகளை செய்தார்.
கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு மாடுகளை சிறப்பாக பராமரிப்பது எப்படி என்றும் விளக்கி கூறினார். இளநகரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த கால்நடைகளை அவற்றின் உரிமையாளர்கள் முகாமிற்கு அழைத்து வந்து பயன் பெற்றனர்.