2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 6 தொகுதிளை கேட்கவுள்ளதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கும்பகோணத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழு விரைவில் கூட உள்ளது. அதற்காக இந்தியா முழுவதும் பயணம் செய்து கட்சியை வலுப்படுத்துகிறோம். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை பொருத்தவரை இந்தியா கூட்டணியில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து பெரும்பாலும் திமுக கூட்டணியில் தான் இருந்து வருகிறோம்.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளும் ஆட்சியாக திராவிடர் மாடல் ஆட்சி உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பாராட்டும் வகையில் திராவிட மாடன் ஆட்சி உள்ளது. அதனால் எங்களது கூட்டணி கொள்கை ரீதியான கூட்டணி. திமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரலாறு நூறு வருட வரலாறு.
இந்த நிலையில் புதிய கட்சிகளின் வருகை என்பது தேர்தல் நேரத்தில் தான் தெரியுமே தவிர, ஜோதிடம் போல் எந்த கருத்தையும் கூற முடியாது. பாஜக அரசு முழுக்க முழுக்க இந்துத்துவா கொள்கை கொண்ட அரசு. உச்ச நீதிமன்றத்தின் பல தீர்ப்புகளை கவனித்துப் பார்த்தால் மத்திய அரசு சிறுபான்மை மக்களுக்கு எதிரான அரசு என்பதை நிரூபித்து உள்ளது.
சொற்ப காரணங்களுக்காக கடைகளை இடிப்பது வீடு, கட்டிடங்களை இடிப்பது இவையெல்லாம் உத்தரபிரதேச ஆட்சியில் நடந்துள்ளன. 1820இல் தொடங்கப்பட்ட அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் சிறுபான்மை கல்லூரி என்பது அனைவருக்கும் தெரியும். இதனை சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உறுதி செய்துள்ளது.
வக்பு சட்ட திருத்தம் என்பது வக்பு வாரியம் இருக்கக் கூடாது என்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம். இது போன்ற சிறுபான்மையினருக்கு எதிரான ஆட்சியாக மத்திய அரசின் ஆட்சி உள்ளது. மொத்தத்தில் ஒட்டுமொத்த மக்களையும் குழப்பிவிடும் ஆட்சி என்றால் அது பாஜக ஆட்சி. மாநிலங்களில் சட்டம் மூலமாகவும் கவர்னர் மூலமாகவும் குழப்பம் செய்து மக்களின் அமைதியை கெடுக்கின்றனர். சட்டசபை தேர்தலில் 8 தொகுதி வரை நாங்கள் போட்டியிட்டதால் தற்போது 6 தொகுதி கேட்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.