Close
ஏப்ரல் 3, 2025 1:45 காலை

அவசர பிரிவில் அரசு ஆஸ்பத்திரிகள்..! காப்பாற்ற முதலமைச்சர் முன் வரவேண்டும்..!

தமிழ் நாடு குடும்பநலம் மற்றும் சுகாதாரத்துறை-கோப்பு படம்

‘இந்தியாவின் மருத்துவத் தலைநகரம்’ என்றழைக்கப்படும் பெருமை, தமிழ்நாட்டுக்கு எப்போதுமே உண்டு.

36 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அவற்றுடன் இணைந்த 62 மருத்துவமனைகள், 37 மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைகள், 1,832 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8713 துணை சுகாதார நிலையங்கள், 487 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட தமிழ்நாட்டில் மொத்தம் 13,214 அரசு மருத்துவக் கட்டமைப்புகள் இருக்கின்றன.

இந்த அளவுக்கு வலுவான அடிப்படை சுகாதாரக் கட்டமைப்பு, இந்தியாவின் வேறெந்த மாநிலத்திலும் இல்லை. ஆனால், இந்தப் பெருமையையெல்லாம் சல்லி சல்லியாக நொறுக்கத் தொடங்கியிருக்கின்றன, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையைச் சுற்றி எழும் சர்ச்சைகளும் குழப்பங்களும்.

“கடந்த சில ஆண்டுகளில், மெல்ல மெல்லச் சீரழிந்து வருகிறது தமிழக சுகாதாரத்துறை. மருத்துவர், செவிலியர், பணியாளர்கள் பற்றாக்குறை ஒருபக்கம் தலைவிரித்தாடும் நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் ஒரு மருத்துவரைக்கூட நியமிக்க முடியாமல் ரொம்பவே திணறுகிறது அந்தத் துறை.

சமீபத்தில்கூட, கிண்டியிலுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், பட்டப்பகலில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டார். குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தவர், போராடித்தான் மீண்டெழுந்திருக்கிறார்.

அந்த அளவுக்கு மருத்துவர்களுக்கே பாதுகாப்பற்ற சூழலும் நிலவுகிறது. இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல், முன்னுக்குப் பின் முரணான செய்திகளையும், பொய்யான தகவல்களையும் அள்ளித் தெளிக்கிறார் துறையின் அமைச்சரான மா.சுப்பிரமணியன்.

மீடியா வெளிச்சத்தோடு வாக்கிங் போவதில் காட்டும் ஆர்வத்தை, துறையை மேம்படுத்துவதில் அவர் காட்டுவதில்லை” எனக் கொதிக்கிறார்கள் அரசு மருத்துவர்களும். சுகாதாரத்துறையைச் சார்ந்தவர்களும்.

பெயர், குறிப்பிட வேண்டாமென்கிற கோரிக்கையுடன், சுகாதாரத்துறைக்குள் நடக்கும் அவலங்களை நம்மிடம் குமுறிக் கொட்டினார்கள் அரசு மருத்துவர்கள் சிலர். “சுகாதாரத்துறையைச் சார்ந்த பல்வேறு நலத்திட்டங்களுக்கு, தமிழ்நாடுதான் முன்னோடி.

தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, ‘இன்னுயிர் காப்போம்’, ‘நம்மைக் காக்கும் 48’, ‘மக்களைத் தேடி மருத்துவம்’ போன்ற சிறப்புமிக்க திட்டங்களைச் செயல்படுத்தினார்கள். ஆரம்பநிலையிலேயே சிறுநீரகச் செயலிழப்பைக் கண்டறிவதற்காக, ‘சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவம் திட்டம்’ கடந்த ஆண்டு ஜூலையில் தொடங்கப்பட்டது.

அந்தத் திட்டத்தின்கீழ் இதுவரை 50 லட்சம் பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டு, சுமார் 20,000 பேருக்கு சிறுநீரக பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. கட்டமைப்புரீதியாகவும், சிறப்புத் திட்டங்கள் ரீதியாகவும் தமிழக சுகாதாரத்துறையின் பலம், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் வலுவாகவே இருக்கிறது.

ஆனால், அரசு தொடங்கும் புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்குப் போதிய மருத்துவர்கள் இருக்க வேண்டுமல்லவா…? கடந்த சில ஆண்டுகளாகப் புதிய மருத்துவப் பணியிடங்களே உருவாக்கப்படவில்லை. தமிழ்நாட்டில், தற்போது 19,866 அரசு மருத்துவர்களும், 38,027 அரசு செவிலியர்களும் இருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 6,000 மருத்துவர் பணியிடங்களும், சுமார் 18,000 செவிலியர் பணியிடங்களும் காலியாக இருக்கின்றன. அதேபோல, 8,671 மருத்துவர் அல்லாத பணியாளர்கள் பணியிடங்களும் காலியாக இருக்கின்றன. அவற்றையெல்லாம் நிரப்புவதற்கு இத்தனை ஆண்டுகளில் உருப்படியாக ஒரு முயற்சியும் செய்யவில்லை துறை அமைச்சர் மா.சு.

மருத்துவ மேற்படிப்பு மாணவர்களையும், ஒப்பந்த மருத்துவர்களையும் வைத்துத்தான் அரசு மருத்துவமனையை ஓட்டுகிறார்கள். ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால், அவர்கள்மீது நடவடிக்கைகூட எடுக்க முடியாது. இந்த லட்சணத்தில்தான் அரசு மருத்துவமனைகள் இயங்குகின்றன.

அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில், அறிவிக்கப்பட்ட காலிப் பணியிட எண்ணிக்கையைவிட இரு மடங்கு அதிகமான மருத்துவர்களைப் பணியமர்த்தினார்கள். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு, `எம்.ஆர்.பி’ எனப்படும் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் ஒரு மருத்துவரைக்கூட நியமிக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் தான், 3,645 அரசு மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியானது.

`டிசம்பருக்குள் தேர்வு நடத்தப்படும்’ என்று அமைச்சர் மா.சு உறுதியளித்திருந்தார். ஆனால், இன்றுவரை அதற்கான அறிகுறியே இல்லை. தமிழக சுகாதாரத்துறையில் இது போன்ற ஒரு மோசமான நிலைமை எந்தக் காலகட்டத்திலும் இருந்தது இல்லை.

மருத்துவர்களும் செவிலியர்களும் பற்றாக்குறையாக இருப்பதால், கட்டமைப்பு வலுவாக இருந்தும்கூட, கிராமப்புற மருத்துவ சேவையில் பின்தங்கிப் போய்க்கொண்டிருக்கிறது தமிழ்நாடு. உதாரணத்துக்குச் சில சம்பவங்களைச் சொல்லலாம்.

திருவண்ணாமலை மாவட்டம், சந்தகவுண்டன்புதூரைச் சேர்ந்த குமுதவள்ளி என்பவருக்கு, கடந்த ஆகஸ்ட் மாதம் குழந்தை பிறந்தது. அதன் பிறகு, தொடர் உடல்நலக்குறைவால் சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், கடந்த நவம்பர் 8-ம் தேதி உயிரிழந்தார்.

அவர் உயிரிழப்புக்குக் காரணம் மருத்துவர் பற்றாக்குறைதான். சம்பந்தப்பட்ட செங்கம் அரசு மருத்துவமனையில் வெறும் ஐந்து மருத்துவர்களே பணியில் இருக்கிறார்கள். ஒன்பது பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

வெறும் ஐந்து மருத்துவர்கள் எப்படி ஆயிரக்கணக்கான நோயாளிகளை கவனிக்க முடியும்..?

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூருக்கு அருகே அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்காகச் சேர்ந்த துர்கா தேவி என்பவருக்கு, செவிலியர்களே பிரசவம் பார்த்திருக்கின்றனர். பிரசவத்தின்போது ஏற்பட்ட பாதிப்புகளால், சில நாள்களில் துர்கா தேவி இறந்து விட்டார். பிறந்த அவருடைய பெண் குழந்தையும் இறந்து விட்டது. அவர்களின் மரணத்துக்கு யார் பொறுப்பேற்பது?

அதேபோல மயிலாடுதுறை அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில், கடந்த நவம்பர் 10-ம் தேதி பிரசவத்துக்காக சிவரஞ்சனி என்பவர் அனுமதிக்கப்பட்டார். பிரசவத்தின்போது குழந்தையின் தோள்பட்டை கருப்பை வாயில் மாட்டிக்கொண்டதால், அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது.

நீண்ட போராட்டத்துக்குப் பிறகு, தாயின் உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்திருக்கிறது. குழந்தை இறந்ததால் சிவரஞ்சனியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபடவும், நிலைமையைச் சமாளிக்க சிகிச்சையளித்த மருத்துவர் ரம்யாவை சஸ்பெண்ட் செய்திருக்கிறது அரசு.

இது போன்ற சிக்கலான பிரசவத்தை மகப்பேறு நிபுணர்களோ அல்லது மூத்த மருத்துவர்களோதான் செய்திருக்க வேண்டும். ஆனால், மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மகப்பேறு (சீமாங்) நிலையத்தில் மூத்த மருத்துவர்களே இல்லை. அந்தப் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. கடைசியில் ரம்யாவை பலிகடா ஆக்கிவிட்டு, தப்பித்துக்கொண்டது துறை மேலிடம்.

மயிலாடுதுறையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதுமுள்ள 129 சீமாங் நிலையங்களின் நிலையும் இதேபோலத்தான் இருக்கிறது. அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காகச் சேர்பவர்களில், கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேருக்கும் மேல், பிரசவத்துக்கு முன்பாகவே வெளியேறி விடுகிறார்கள்.

அதற்கு மருத்துவர் பற்றாக்குறைதான் மூலக் காரணம். ஐ.சி.யூ-வில் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளிக்கலாம். ஒரு துறையே ஐ.சி.யூ-வில் இருந்தால் எப்படி சிகிச்சை அளிப்பது..? இன்றைய தமிழக சுகாதாரத் துறை அந்த நிலையில்தான் இருக்கிறது” என்றனர் காட்டமாக.

மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை குறித்து வி.சி.க பொதுச் செயலாளரும், எம்.எல்.ஏ-வுமான சிந்தனைச்செல்வன், “எனது மாவட்டமான கடலூரில், மாவட்டத் தலைமை மருத்துவமனை இல்லை. இந்த மாவட்டத்தில் மொத்தமாக 254 மருத்துவர் பணியிடங்கள் இருக்கின்றன.

அவற்றில், 154 பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. பணியில் இருக்கும் 100 மருத்துவர்களில், 40 பேர் ஒப்பந்த அடிப்படையில்தான் பணியாற்றுகிறார்கள். இங்கு மட்டுமல்ல, எல்லா மாவட்டங்களிலும் இதே நிலைதான் இருக்கிறது. மருத்துவப் பணியாளர்கள் பற்றாக்குறை தொடர்பாக, சட்டமன்றத்தில் தொடர்ச்சியாகப் பேசிவருகிறேன். அதைச் சரிசெய்ய அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் பற்றாக்குறை ஒருபக்கம் சுகாதாரத்துறையை நெருக்குகிறது என்றால், நிர்வாகக் குளறுபடிகள் மறுபக்கம் சுற்றலில் விடுகின்றன.

சுகாதாரத்துறை உயரதிகாரிகள் சிலர், “அரசு மருத்துவமனைகளுக்குத் தரமில்லாத மருந்துகளை விநியோகம் செய்யும் நிறுவனங்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்து, அந்த நிறுவனம் வெளி மார்க்கெட்டில் மருந்து சப்ளை செய்திருந்தால், அதையும் பறிமுதல் செய்யவேண்டியது தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் பொறுப்பு.

தற்போது, அரசு மருத்துவமனைகளுக்குத் தரமில்லாத 46 மருந்து வகைகளை சப்ளை செய்த 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அந்த நிறுவனங்கள் வெளி மார்க்கெட்டில் சப்ளை செய்த மருந்துகளை இதுவரை பறிமுதல் செய்யவில்லை.

‘எந்தெந்த நிறுவனங்கள் தரமில்லாத மருந்துகளை சப்ளை செய்தன?’ என்ற விவரத்தையும் பொதுமக்களிடம் தெரிவித்து சுகாதாரத்துறை விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை.

07-11-2024-ல் அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்… முன்னுக்குப் பின் முரணாகப் பேசி, குழப்பத்தை ஏற்படுத்துவதையும் தொடர்ச்சியாகச் செய்கிறார் அமைச்சர் மா.சு. 2022-ல், ‘பொங்கல் பரிசுத்தொகுப்பில் தரமில்லாத பொருள்களை வழங்கி, அபராதம் விதிக்கப்பட்ட அனிதா டெக்ஸ்கார்ட் என்ற நிறுவனத்துக்கு, மெடிக்கல் கிட் டெண்டர் எப்படி வழங்கப்பட்டது.?’ என்கிற கேள்வியை பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை எழுப்பியிருந்தார்.

அதற்கு, ‘அண்ணாமலை கூறிய நிறுவனத்துக்கு டெண்டரே வழங்கப்படவில்லை’ என்று அவசரகதியில் சொன்னார் மா.சு. உண்மையில், அந்த நிறுவனம் எல் 2-வாக இருந்து 4,21,200 மெடிக்கல் கிட்டுகளை அரசுக்கு வழங்கியிருக்கிறது.

கடந்த ஆகஸ்ட் மாதமே டெங்கு காய்ச்சல் தமிழகத்தில் பரவத் தொடங்கிவிட்டது. அது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டபோது, ‘தமிழகத்தில் எங்கே டெங்கு இருக்கிறது என்று எடப்பாடி காட்ட வேண்டும்’ என்று காட்டமாக பதிலளித்திருந்தார் மா.சு.

ஊரெங்கும் டெங்கு காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்டு மரணங்கள் நிகழ்ந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், செய்யூருக்கு அருகே 6-வயது சிறுமி கடந்த நவம்பர் 5-ம் தேதி உயிரிழந்த பிறகுதான் விவகாரம் பெரிதானது.

உடனே, மருத்துவத்துறை சார்பில் நவம்பர் 7-ம் தேதி ஒரு செய்திக்குறிப்பும் வெளியானது. அதில், 5.11.2024 வரை 20,138 பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும், அவர்களில் 8 பேர் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், 2023-ல் 29,401 பேரும், 2022-ல் 30,425 பேரும் பாதிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப் பட்டிருந்தது. முன்னதாக டெங்கு பாதிப்பு குறித்து 2024-ம் ஆண்டுக்கான அரசின் கொள்கை விளக்கக் குறிப்பில், 2022-ல் 6,430 பேரும், 2023-ல் 9,121 பேரும், 2024 (31.5.2024) வரை 4,384 பேரும் பாதிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதில் எது உண்மை என்று அமைச்சருக்குத்தான் தெரியும்.

கொள்கை விளக்கக் குறிப்பில் டெங்கு பாதிப்பைக் குறைவாகக் காட்டிவிட்டு, தற்போது பிரச்னை எழுந்ததும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைவு என்பதாகக் காட்ட, ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறார் அமைச்சர் மா.சு.

முன்னதாக, கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரண விவகாரத்தில் பேசுபொருளான ‘Fomepizole’ மருந்து உண்மையில் நம்மிடம் இல்லை. இல்லாத மருந்தை ‘இருக்கு’ என்று சொல்லிவிட்டு, பின்பு, ‘இதன் தயாரிப்புப் பணி நிறுத்தப்பட்டு நீண்ட நாள்களாகின்றன. மும்பையில் ஒரே ஓர் இடத்தில் விற்பனைக்கு இருந்த இந்த மருந்தை வாங்கிவந்தோம்’ என்று மாற்றிப் பேசினார்.

சமீபத்தில்கூட கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டபோது, ‘தாக்கிய நபர் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்’ என்று கூறிவிட்டார் அமைச்சர். உண்மையில், தாக்கியவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான்.

இப்படி, அவரது நிர்வாகக் குளறுபடிகள், உளறல்கள், அந்தர்பல்டிகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. துறையை நிர்வகிக்க முடியாமல் அமைச்சர் திணறி விழிபிதுங்குவது, வெட்ட வெளிச்சமாகியிருகிறது” என்றனர்.

இறுதியாக, இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் விளக்கம் கேட்டோம். “தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, மக்கள் நலன் சார்ந்து ஏராளமான திட்டங்களைச் செயல்படுத்தியிருக்கிறோம்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் பணிகளை வேகப்படுத்த, அதிலிருந்த காலிப் பணியிடங்களை நிரப்பி, சேர்மனையும் மாற்றியிருக்கிறோம். ‘அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் காலிப் பணியிடமே இல்லை’ என்று நான் கூறவில்லை. காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப முழுவீச்சில் பணிகளை மேற்கொள்கிறோம்.

உதாரணமாக, மருத்துவர் பற்றாக்குறையைப் போக்க, 2,553 காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்துவருகிறோம். தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்த தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மருத்துவர் அல்லாத இதர பணிகளுக்கான 18,460 இடங்களை நிரப்பியிருக்கிறோம். அதேபோல, 1,066 ஆரம்ப சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்பத் தடையாக 38 வழக்குகள் போடப்பட்டன. அந்த வழக்குகளையெல்லாம் ஒருங்கிணைத்து நீதிமன்றத்தின் மூலமாகத் தீர்வுபெற்று, தேர்வு நடத்த ஆயத்தமாகிவருகிறோம்.

மகப்பேறு மருத்துவர்கள் பிரிவில் காலியாக இருக்கும் 250 பணியிடங்களை நிரப்ப, நேரடி நேர்காணல் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறோம். 2,250 கிராம சுகாதாரச் செவிலியர்களைப் பணியமர்த்த விருக்கிறோம். அரசின் மீது காழ்ப்புணர்ச்சியால் எதிர்க்கட்சியினர் அவதூறு கிளப்புகிறார்கள். அதற்கெல்லாம் எங்கள் செயல்பாடுகளின் மூலமாக பதிலளித்துவருகிறோம்” என்றார்.

தனது துறையின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்துமே அரசியல் காழ்ப்புணர்ச்சி என்கிறார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். ஆனால், தொடர்ந்து நிகழும் மரணங்களும், பாதிப்புகளும், பிரச்னைகளும், குழப்பங்களும் சுகாதாரத்துறையின் நிர்வாகச் சீர்கேட்டை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

வலுவான கட்டமைப்பைத் தமிழகம் கொண்டிருந்தாலும், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை என்பது பெரிய அளவில் அந்தக் கட்டமைப்பையே சிதைத்துக்கொண்டிருக்கிறது. தடைசெய்யப்பட வேண்டிய மருந்துகள் பொதுவெளியில் இன்னும் விற்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்டவுடன், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிட்டிருக்கிறார்கள். இதுதான் பிரச்னைக்கான தீர்வா… கோடிக்கணக்கான மக்கள் தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிவரும் ஒரு துறையின் பிரச்னைகளின் மீது, எப்படி ஓர் அமைச்சர் அக்கறையில்லாமல் இருக்க முடியும்?

இனியாவது சுதாரிப்பாரா மா.சு… அவரின் செயல்பாடுகளைக் கண்காணிப்பாரா முதல்வர்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top