Close
டிசம்பர் 3, 2024 5:12 மணி

போக்குவரத்து நெரிசலை குறைக்க ஓத்துழைக்காத அரசுப் பேருந்து ஓட்டுநர்கள்

காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதி வழியாக போக்குவரத்து விதிகளை மீறி வரும் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள்

காஞ்சிபுரத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஓத்துழைக்காத அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர்களால் காவல்துறை செய்வதறியாது உள்ளனர்.

கோயில் பட்டு நகரம் என கூறப்படும் காஞ்சிபுரத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளி மாநில வெளி மாவட்டங்களில் இருந்து வந்து போகின்றனர். இவர்கள் பயணம் செய்ய நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் பயன்படுத்தும் நிலையில் காஞ்சிபுரத்தில் உள்ள பொதுமக்களும் அதிக அளவில் இருசக்கர வாகனங்களில் பயணம் செய்து தங்கள் தேவைகளுக்காக சென்று வருகின்றனர்.

திருமண நாட்களில் காஞ்சிபுரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல் துறைக்கு பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

இதனை ஒட்டி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை அதிக கூட்டம் காணப்படும் காந்தி சாலையை போக்குவரத்து மாற்றம் செய்தது. கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களுக்கு என தனி பாதையும் மற்றவர்களுக்கு ஒரு பாதை என போக்குவரத்து நெரிசலின்றி செல்லும் வகையில் பேரிகார்ட் அமைத்து செயல்படுத்தி வருகின்றனர்.

மேலும் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து வேலூர் மற்றும் சென்னை செல்லும் வாகனங்கள் கச்சபேஸ்வரர் கோயில் புத்தேரி தெரு வழியாக ஒலிமுகமது பேட்டை வழியாக சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அடைய வேண்டும் என்ற அறிவுரையுடன் செயல்படுத்தி வரும் நிலையில், பேருந்து நிலையத்திலிருந்து வெளியேறும் அரசு பேருந்துகள் கிழக்கு ராஜவீதி வழியாகவும் மேற்கு ராஜ வீதி வழியாகவும் விதிகளை மீறி செல்வதால் அப்பகுதியில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

போக்குவரத்து நெரிசலை குறைக்க மாவட்ட நிர்வாகம்  மற்றும் காவல்துறை எடுக்கும் நடவடிக்கைக்கு போக்குவரத்து கழக ஓட்டுநர்கள் ஒத்துழைப்பதில்லை என போக்குவரத்து காவலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் சில இடங்களில் ஊர்க்காவல் படையினர் பணி பாதுகாப்பில் உள்ள போது ஓட்டுநர்கள் அவர்களை அலட்சியப்படுத்தி செல்வதும் இதனால் அவ்வப்போது சில வாக்குவாதங்களும் ஏற்படுகிறது.

அரசு ஊழியர்கள் செயல்படுத்தும் விதிகளை அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களே மதிக்காத போது பிற வாகன ஓட்டிகள் எவ்வாறு மதிப்பார்கள் என போக்குவரத்து காவல்துறையினர் கேள்வி எழுப்புகின்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top