சமூக வலைதளத்தில் வந்த அதிர வைக்கும் ஒரு பதிவை நம் வாசகர்களுக்கு தருகிறோம். எது சரி என நீங்களே முடிவு செய்யுங்கள்.
எனக்கு தெரிந்த (ஓரிரு) நின்ற திருமணங்கள் பற்றிய விஷயம்.
நிச்சயதார்த்தம் ஆனதும் ஏழு எட்டு மாதங்களுக்கு தள்ளி முகூர்த்தம் வைத்திருந்தார்கள். இப்பொழுது தான் தினமும் வீடியோ கால் வரை பேசிக் கொள்ளும் வசதி இருக்கிறது.
முதல் ஓரிரு மாதங்கள் நன்றாகத்தான் சென்று கொண்டிருந்தது. பழகப் பழக பாலும் புளிக்கும் என்பது போன்று பல விஷயங்களை பேசி இறுதியில் ஒரு நாள் மனக்கசப்பு ஏற்பட்டது.
பையனிடம் பெண் சொன்னாள் நீ எனக்கு சரிப்பட்டு வர மாட்டாய் 10 நாட்களுக்கு முன்பு ஒரு விஷயத்தில் நீ உடன்படவில்லை. 20 நாட்களுக்கு முன்பு ஒரு விஷயத்தை சொல்லும் பொழுதே உன்னைப்பற்றி நான் முடிவு செய்து வைத்திருந்தேன். இப்படி தேதி வாரியாக அடுக்கிக் கொண்டு போனவள் திருமணமே வேண்டாம் என்று ஒற்றைக் காலில் நின்றாள்.
சரி பெரியவர்களாவது பேசினார்களா பெண்ணைப் பெற்றவர்கள் பேசினார்களா என்றால் இல்லை எங்கள் பெண்ணை நாங்கள் சுதந்திரமாக வளர்த்திருக்கிறோம். அவள் அப்படித்தான் பேசுவாள் நாங்கள் நிச்சயதார்த்தத்திற்கு கொடுத்தவை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுகிறோம் என்று வந்து புடவை முதலானவற்றையெல்லாம் கொடுத்துவிட்டு சென்றார்கள்.
இந்த நிகழ்விற்கு அடுத்து பையன் எனக்கு திருமணமே வேண்டாம் எந்த பெண் வந்தாலும் இப்படித்தான் பேசுவாள் பெற்ற தாய் தந்தையரை நான் நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று திருமணத்தை மறுத்து விட்டான்.
இன்னொரு நிகழ்வு
நிச்சயதார்த்தம் ஆனதும் பொண்ணும் பையனும் தினமும் பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கும் முதல் இரு மாதங்கள் நன்றாக சென்றது திடீரென்று பெண் சொன்னாள்.
நீ என் அப்பா அம்மாவோடு இங்கு இருக்க வேண்டும் உன் அப்பா அம்மாவை (அவர்களுக்கு பெண் வைத்த பெயர் ராகு கேது) உங்கள் ஊரிலேயே விட்டுவிட வேண்டும். திருமணத்திற்கு பிறகு மாதம் ஒருமுறை கூட நீ அங்கு செல்லக்கூடாது. எங்கள் ஊரிலேயே குடி வைக்கவும் கூடாது இதற்கு சம்மதம் என்றால் திருமணம் என்று ஆரம்பித்தாள்.
ஒரே மகனை பெற்றெடுத்த அந்த பெற்றோர்களை விட்டு விட்டு வர முடியாது.. என்று பையன் சொன்னான். மேலும் என் பெற்றோர்கள். வயதானவர்கள் அதனால் நம் ஏரியாவில் ஒரு வீடு பார்த்து குடி வைக்கின்றேன். நீ என்றைக்கும் வர வேண்டியது இல்லை நான் மட்டும் சென்று பார்க்கிறேன் என்று சொல்லிப் பார்த்தான். பலன் இல்லை. திருமணம் நின்று போனது
இரு நிகழ்வுகள் மட்டுமல்ல இது சமீபத்தில் நடந்தவை. இன்னும் பல விஷயங்களில் எல்லா இடங்களிலும் பெண்தான் திருமணம் வேண்டாம் என்று மறுத்து திருமணம் நின்று போன செய்திகளை அறிகிறோம்.
இப்படியே சென்று கொண்டு இருந்தால் என்ன ஆகும் சமூகம் எப்படி இருக்கிறது என்று யோசியுங்கள். மூன்றாவதாக ஒரு நிகழ்வை சொல்ல விருப்பப்படுகிறேன். அது பரவலாக இப்பொழுது வந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு பகீர் செய்தி
குழந்தை வேண்டாம் என்றால் திருமணம் செய்து கொள்ளலாம் என்கின்ற அந்த செய்தி பகீர் தகவலாக இருக்கிறது. இங்கும் பெண் தான் இதை சொல்கிறாள்.
20 ஆண்டுகள் ஒரு குழந்தையைப் பெற்று எடுத்து வளர்த்து சீராக்கி அவர்களை செப்பனிட வேண்டும் இது தேவையில்லாத தலைவலி அதனால் குழந்தை வேண்டாம் என்று கருத்து முன் வைக்கப்படுகிறது.
பையன் என்ன சொல்லுவான். விழி பிதுங்கி நிற்கிறான்
உங்கள் முன் சில கேள்விகள்.
- குழந்தை வேண்டாம் என்றால் சந்ததிகள் எப்படி வளரும்?
- திருமணம் வேண்டாம் என்றால் அடுத்து என்ன? சமூகம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது?
- பையன் ஒரு குழந்தையாவது பெற்றுக் கொள்ளலாம் என்கிறான் பெண் மறுக்கிறாளே என்ன செய்வது?
இதற்கு பதில் தெரியவில்லை