சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி (CIBF) வரும் ஜனவரி 16 முதல் 18ம் தேதி வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சர்வதேச புத்தகக் கண்காட்சியில் சுமார் 50 நாடுகள் பங்கேற்று 1,000 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டு நடைபெற்ற முதல் சர்வதேச புத்தக கண்காட்சியில் 24 நாடுகள் பங்கேற்றன. அங்கு 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 2024ல் 40 நாடுகள் பங்கேற்று 752 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிகள் கழகம் தமிழ் புத்தகங்களை அரபு, ஆர்மேனியன், சீனம், ஜார்ஜியன், கொரியன், மலாய், சுவாஹிலி, அல்பேனியன் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்த்துள்ளது. மேலும், 160 பிற மொழி நூல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
32 மாவட்ட மைய நூலகங்கள், 314 முழுநேர கிளை நூலகங்கள், 1,612 கிளை நூலகங்களில் வைஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தென்காசி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் தலா 6 கோடி ரூபாய் மதிப்பில் மாவட்ட மைய நூலகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
புத்தகங்களையும் வாசகர்களையும் இணைத்ததற்காக மொத்தம் 39 நூலகர்களுக்கு டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது வழங்கப்பட்டது. அவர்களுக்கு சான்றிதழ், பதக்கம், 5 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.