தமிழ்நாடு பாஜக உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் மேலிடம் திருப்தி அடையவில்லை என்று தேசிய தலைமை கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னை தி.நகர் மாநில தலைமை அலுவலகத்தில், தமிழக பாஜகவின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த லாயோசனைக்கூட்டத்தில் மேலிடப் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் ஹெச்.ராஜா ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், உறுப்பினர் சேர்க்கையில் தமிழ்நாடு பாஜக மீது கொஞ்சமும் திருப்தி இல்லை என்று தேசியத் தலைமை கூறி இருப்பதை சுட்டிக்காட்டினார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு பாஜகவில் பல்வேறு குழப்பங்கள் ஏற்படும் சூழல் நிலவுவதால் கூட்டணி விவகாரம் தொடர்பாக பொதுவெளியில் யாரும் பேசக்கூடாது என்பதை அரவிந்த் மேனன் கண்டிப்புடன் கூறியதாகத் தெரிகிறது.
குறிப்பாக அதிமுகவுடனான கூட்டணி விவகாரத்தில் எந்த கருத்தையும் வெளிப்படுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் லண்டனில் இருக்கும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, காணொலி வாயிலாக கலந்துகொண்டார்.
மேலும், வரும் ஜனவரி மாதத்தில் மாநில தலைவராக அண்ணாமலையை மீண்டும் நியமிப்பது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படலாம் என்பதையும் கூறப்பட்டதாக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.