Close
நவம்பர் 21, 2024 6:50 மணி

செருப்பால் அடிப்பாங்களாம்…. தேனி நகரில் தான் இந்த கொடுமை…

தேனி நகராட்சி பகுதியில் தேங்கி கிடக்கும் குப்பை.

தேனியில் குப்பை பிரச்னை ‘செருப்பால் அடிப்பேன்’ என்று பிளக்ஸில் எழுதி வைக்கும் அளவு வெடித்துள்ளது.

தேனி நகராட்சியில் சுகாதாரத்துறை இருக்கிறதா? இல்லையா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரணம் கடந்த இரண்டு ஆண்டுகளாக தேனியில் வீடு, வீடாக குப்பைகளை சேகரித்து அகற்றுவது, சாக்கடைகளை துார்வாருவது போன்ற விஷயங்களில் பெரும் சுணக்கம் ஏற்பட்டு வருகிறது. மக்களும் இன்று சரியாகி விடும், நாளை சரியாகி விடும் என காத்திருந்தது தான் மிச்சம். நாளுக்கு நாள் சிக்கல் அதிகரித்து வருகிறதே தவிர குறையவேயில்லை.

தற்போதய நிலையில் குறைந்தது ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தான் வீடு, வீடாக குப்பைகளை சேகரிக்கின்றனர். சில தெருக்களில், சில வார்டுகளில் வாரம் ஒருமுறை கூட குப்பைகளை அகற்றுவதில்லை. சாக்கடை துர்வாறுவதில்லை. அதுவும் இந்த மழைக்கால கொடுமை உச்சகட்டத்தில் உள்ளது. ஐந்து நாட்கள் குப்பைகளை வீட்டிற்குள் போட்டு வைக்க முடியாமல், பொதுமக்கள் ஏதாவது ஒரு இடத்தில் குப்பை கொட்டுகின்றனர். அந்த பகுதியில் வசிப்பவர்கள் குப்பை கொட்ட வருபவர்களிடம் பிரச்னை செய்கின்றனர். இந்த பிரச்னை தேனியில் பல தெருக்களில் உள்ளது.

தேனி என்.ஆர்.டி., நகரில் ஒரு படி மேலே போய், ‘இங்கு குப்பை கொட்டினால் செருப்படி விழும்’ என போர்டே வைத்து விட்டனர். என்ன தான் தவறு என்றாலும், செருப்பால் அடிப்பேன் என பிளக்ஸ்சில் எழுதி வைப்பது பொதுமக்களின் மனதை மிகவும் கஷ்டப்படுத்தியது.

இந்த குப்பை விவகாரம் குறித்து கவுன்சிலர்கள் நகராட்சி தலைவர், கமிஷனரிடம் பலமுறை பேசியும் எந்த பலனும் இல்லை. பொதுமக்கள் போராட்டம் நடத்தி ஓய்ந்து போய்விட்டனர். போராட்டம் நடத்தும் மக்களுடன் பேசக்கூட நகராட்சி அதிகாரிகள் முன்வருவதில்லை.

பொதுமக்கள், முக்கிய பிரமுகர்கள் என யார் போன் செய்தாலும், நகராட்சி தலைவர் ரேணுப்பிரியாவும், அவரது கணவர் பாலமுருகனும் போனை எடுப்பதில்லை. இந்த குப்பை பிரச்னை ‘செருப்படி சிக்கல் வரை’ கொண்டு போய் விட்டும் தலைவரும், அவரது கணவரும், (இவரும் கவுன்சிலர் தான்) கண்டுகொள்ளாமல் இருப்பது, தேனி நகர்பகுதியில் வசிக்கும் மக்களை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. நல்ல நிர்வாகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ரேணுப்பிரியாவை (அவரது கணவர் பாலமுருகனை) தேர்ந்தெடுத்த மக்கள், மக்கள் மட்டுமல்ல… பல கவுன்சிலர்களும் தான், தற்போது குறைசொல்லும் வாய்ப்பு கூட தங்களுக்கு கிடைக்கவில்லையே என புலம்பி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top