திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 330 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாபெரும் டைடல் பூங்காவை முதல்வர் திறந்து வைத்தார்.
இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழ்நாட்டினை, 2030-ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என தமிழக முதல்வர் இலக்கு நிர்ணயித்துள்ளார்.
அதன்படி தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்ப சூழல் அமைப்பினை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், விழுப்புரம், தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில், ரூ. 330 கோடி செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள மாபெரும் டைடல் பூங்காவை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இக்கட்டடத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செயல்பட தேவையான, நவீன தொலைத்தொடர்பு வசதிகள், தடையற்ற உயரழுத்த மும்முனை மின் இணைப்பு மற்றும் மின் இயக்கி வசதிகள், மின்தூக்கி வசதிகள், சுகாதார வசதி, தீ பாதுகாப்பு மற்றும் கட்டட மேலாண்மை வசதிகள், சிசிடிவி கேமரா வசதிகள், 927 கார்கள் மற்றும் 2280 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, அரங்கம், 24X7 பாதுகாப்பு வசதிகள், உணவகம் மற்றும் உடற்பயிற்சி கூடம் போன்ற அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்கட்டடமானது, 6,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் பணிபுரியும் வகையிலும் பசுமை கட்டடம் வழிமுறைகளின்படியும் கட்டப்பட்டுள்ளது.
பட்டாபிராமில் இப்புதிய டைடல் பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் தமிழ்நாட்டின் வடபகுதியைச் சார்ந்த குறிப்பாக திருவள்ளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள படித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவதுடன் அம்மாவட்டங்களின் சமூக பொருளாதார நிலையும் மேம்படும்.
பட்டாபிராம் டைடல் பூங்கா திறப்பு விழாவின்போது, நிறுவனங்களுக்கு அப்பூங்காவில் தள ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை முதல்வர் வழங்கினார்.
இவ்விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி நாசர். தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் மாதவரம் எஸ்.சுதர்சனம், கும்மிடிப்பூண்டி டி.ஜெ.கோவிந்தராஜன், பொன்னேரி துரை.சந்திரசேகர், திருத்தணி சந்திரன், திருவள்ளூர் வி.ஜி. ராஜேந்திரன், பூந்தமல்லி கிருஷ்ணசாமி, மதுரவாயல் கே.கணபதி, அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை செயலாளர் அருண் ராய், டிட்கோ மற்றும் டைடல் பார்க் மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர், ஆவடி மாநகராட்சி ஆணையர் கந்தசாமி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.