போதை பொருள் நடமாட்டம் குறித்த புகார்களுக்கு தயவு தாட்சண்யம் பார்க்காமல் எந்தவித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை சரக டிஐஜி மூர்த்தி தென்காசியில் அளித்த பேட்டியில் கூறினார்.
தென்காசி மாவட்டத்திலுள்ள கல்லூரிகளில் அமைக்கப்பட்டு இருக்கும் போதை பொருள் தடுப்பு குழுக்களுக்கான பயிற்சி முகாம் தென்காசியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் முன்னிலையில் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமில் சிறப்பு அழைப்பாளராக நெல்லை சரக டிஐஜி மூர்த்தி கலந்து கொண்டு கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார் இதன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது-
தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் 256 கல்லூரிகளில் செயல்பட்டு வரும் போதை பொருள் தடுப்பு குழுக்களை ஒழுங்குபடுத்தி அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த சரகத்தில் போதை பொருளை முற்றிலுமாக ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக 256 கல்லூரி முதல்வர்களிடம் ஒவ்வொரு கல்லூரியிலும் போதைப்பொருள் தடுப்பு குழுக்களை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தோம். அதன் அடிப்படையில் இந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுக்களுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்டு வருகிறது. இன்றைக்கு தென்காசி மாவட்டத்தில் இருக்கும் 74 கல்லூரிகளில் உள்ள குழுக்களுக்கு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. 57 ஆசிரியர்கள்120 மாணவர்கள் இந்த முகாமில் பங்கேற்றுள்ளனர்.
அடுத்த கட்டமாக ஒவ்வொரு கல்லூரியிலும் அனைத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படும். இதன் மூலமாக ஏறக்குறைய 10 லட்சம் பேருக்கு போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு தகவல் சேர்க்கப்படும்.
தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களிலும் பதிவாகும் போதை பொருள் குறித்த வழக்குகளை விசாரித்து வருகிறோம். 10581என்ற உதவி எண் அனைவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் வழியே போதைப்பொருள் நடமாட்டம் குறித்த தகவல்களை போலீசாருக்கு தெரிவிக்கலாம்.
குற்றம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல், எந்தவித பாரபட்சமும் பார்க்காமல் நடவடிக்கை எடுக்கப்படும். முதற்கட்டமாக கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.
இரண்டாவது கட்டமாக பள்ளி மாணவர்களுக்கும் இதே போன்ற முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம். கல்லூரி விடுதிகளில் போதைப் பொருள் நடமாட்டம் இருப்பதாக தெரிய வந்தால் அங்கும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.