Close
ஏப்ரல் 3, 2025 10:53 மணி

ரஜினிகாந்தும் தமிழக அரசியலும்..!

நடிகர் ரஜினி

நடிகர் ரஜினியைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி வருகிறார்கள்!

இதே ரஜினிகாந்த் 1996ல் திமுகவிற்கு ஆதரவாக வாய்ஸ் கொடுக்கிறேன் என மதிமுகவின் வளர்ச்சியைத்  தடை செய்தார். அந்தத் தேர்தலில் மதிமுக  துவக்கத்திலே தோற்றது.

ரஜினியின் பாட்ஷா படம் அவரது ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றி பெற்ற போது அப் படத்தைத் தயாரித்த ஆர்.எம்.வீரப்பன் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று மிகவும் எதிர்பார்த்தார். அந்த வகையில் ரஜினிக்கு நெருக்கமாகவும் இருந்தார். அந்த சமயத்தில் தான்  ரஜினிகாந்த் தன் ரசிகர்களுக்கு வாய்ஸ் கொடுத்து 1996 தேர்தலில் மதிமுகவை வரவிடாமல் தடுத்து விட்டார்.

அரசியல் கட்சி லட்சியத்தில் உறுதி என்றெல்லாம் ரஜினி பேசிக் கொண்டிருக்கும் போது சீமான் அவரைக் கடுமையாக அச்சமயத்தில் விமர்சித்தார். திரைத்துறை வேறு அரசியல் வேறு என்றெல்லாம் சீமான் காட்டமாகப் பேசினார்.

ரஜினிகாந்த் எப்படியும் கட்சி ஆரம்பித்து விடுவார் என்று தமிழருவி மணியன் அவருக்கு ஆதரவாகத் தமிழ்நாடு முழுக்க சுற்றுப் பயணம் எல்லாம் செய்து விட்டு வந்திருந்தார்.

ஆனால் ரஜினிகாந்த் ஆந்திரா சென்றிருந்த போது அங்கு சக நடிகர் ஒருவர் திமுக சார்பாக ஏதோ ஒரு காரணம் சொன்னார் என்றும் அதன்படி தனக்கு அரசியல் ஆகாது என்றும் சொல்லி விட்டு அவர் பாட்டுக்கு இமயமலைக்குப் போய் விட்டார்.

யார் ஒருவருக்கும்  அல்லது எந்த கட்சிக்கும் தன்னுடைய ஆதரவு நிலைப்பாட்டை உறுதியாகக் கூறாமல் யார் ஜெயித்து வந்தால் நமக்கு என்ன? என்று அரசியலை அலட்சியமாகக் கையாண்டார். அதேபோல் கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் உதயநிதிக்கு ஆதரவாகப் பேசித் துரைமுருகனைச் சங்கடப்படுத்தினார்.

அரசியலைப் பொறுத்தவரை இவர் எந்த பக்கம்  அல்லது யாருடன் உண்மையாக நிற்கிறார்? அவரது நிலைப்பாடு என்ன? சில நேரம் மதில் மீது பூனையாகவும் சில நேரம் கொல்லையில் உறங்கும் பூனையாகவும் இருக்கிறார்.

மோடியையும் பாராட்டி பேசுகிறார். திமுகவிற்கும் சப்போர்ட் ஆகவும் பேசுகிறார். ஒன்று மோடி பக்கம் இருக்கிறாரா அல்லது திமுகவின் பக்கம் இருக்கிறாரா? அவர் மனதில் என்ன இருக்கிறது என்றே தெரியவில்லை? இப்போது அ.தி.மு.க.,வின் இரட்டை இலை ஒரு பிரம்மாஸ்திரம் என ஒரு கமெண்ட் கொடுத்துள்ளார்.

திடீரென ஆன்மீகம் பேசி விடுகிறார்.  அயோத்தியில் பிரதமர் மோடி ராமர் கோயில் கட்டியதை மிகப்பெரிய சாதனை எனவும் பெருமைப்படுத்துகிறார்.

அவரது நோக்கம் தமிழ்நாட்டில் திமுக. டெல்லியில் பாஜகவா? ஒன்றும் புரியவில்லை. சும்மா இருப்பவரை ஆளுக்கு ஆள் தூண்டுகிறார்களா? அதுவும் புரியவில்லை. இப்படிப்பட்ட நபரை நம்பி அரசியலில் என்ன முடிவுகள் எடுக்க முடியும்?

அரசியல் என்றால் துணிந்து வர வேண்டும். மக்கள் மீது அபிமானமும் அவர்களது எண்ணமும் அவர்களுக்கான திட்டங்களும் தெரிந்திருந்தால் களத்தில் இறங்கிவிட வேண்டியது தானே. அதை விட்டு விட்டு வருகிறேன் இதோ வந்து விட்டேன் என்று சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது.

கேட்கப்படும் கேள்வி என்னவெனில் ரஜினியின் நிலைப்பாடு பாஜகவிற்கா? திமுகவிற்கா? இல்லை சீமானுக்கா?. நேற்று சந்தித்த மதுவந்தி அருணுக்கா?.

இதை உறுதியாக அவரது மனசாட்சியின் படி சொல்லித்தான் ஆக வேண்டும். அதை விட்டுவிட்டு குழம்பிய குட்டையில் மீன் பிடித்துக் கொண்டிருப்பது அரசியலுக்கு உதவாது.

நன்றி: கேஎஸ்ஆர் போஸ்ட்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top