Close
மே 20, 2025 4:20 காலை

வாடகை இருமடங்கு உயர்வு: கோயில் நிர்வாகத்தை முற்றுகையிட்ட குடியிருப்பவாசிகள்

காஞ்சிபுரம் பிள்ளையார் பாளையம் பகுதியில் கச்சபேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருக்கும் நபர்கள் திடீர் வாடகை உயர்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திருக்கோயில் நிர்வாக அலுவலகத்திற்கு வந்தபோது.

காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோயில் சொந்தமான இடம் பிள்ளையார்பாளையம் அரச மரத் தோட்டப்பகுதியில் உள்ளது.

இங்கு சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பலர் அப்பகுதியினை சுத்தம் செய்து வீடு கட்டி வசித்தும், திருக்கோயிலுக்கு வாடகை செலுத்தியும் வருகின்றனர்.

அப்பகுதியில் தினக் கூலி தொழிலாளர்கள் அதிகம் உள்ள நிலையில் குறைந்த வாடகை என்பதால் அதனை முறையாக செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் வாடகை உயர்த்தி உள்ளதாகவும், அதில் இருமடங்காக உயர்ந்துள்ளதும் குடியிருப்பு வாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இங்கு 300 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை வாடகை செலுத்தி வசித்து வரும் நிலையில் , திடீர் வாடகை உயர்வு தங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாகவும் இதுகுறித்து எந்தவித தகவலும் தங்களுக்கு தெரிவிக்கவில்லை என அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கச்சபேஸ்வரர் திருக்கோயில் நிர்வாக அலுவலகத்தில் இதுகுறித்து முறையிட வருகை புரிந்தனர்.

அங்கிருந்த ஊழியர்கள் இது குறித்து இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கும் படியும் தெரிவித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஊழியர்கள் கூறுகையில் , ஏற்கனவே இருந்த நில வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் வாடகை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மாநகராட்சியாக உயர்த்தப்பட்டதால் வழிகாட்டி மதிப்பு உயர்ந்துள்ளதால் இந்த வாடகை உயர்வு எனவும் தெரிவித்தனர்.

இருப்பினும் குடியிருப்புவாசிகள் அனைவரும் இணை ஆணையர் அலுவலகத்தில் சென்று இதுகுறித்து முறையிட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top