திருவள்ளூர் அருகே ஏழை, எளிய மக்களுக்கு அரசால் இலவசமாக வழங்கப்பட்ட வீட்டுமனை நிலத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சட்ட விரோதமாக வணிக வளாகம் கட்டி வாடகைக்கு விடப்படுவதாக மாவட்ட ஆட்சியரிடம் கிராமமக்கள் புகார் மனு அளித்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கம் அடுத்த அணைக்கட்டு அருகே 75-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர், நரிக்குறவர் என பல்வேறு சமூகத்தை சேர்ந்த ஏழை, எளிய குடும்பத்தினருக்கு கடந்த 2023- ஆம் ஆண்டு தமிழக அரசால் இலவச வீட்டு மனை பட்டா வழங்க பட்டது.
இந்நிலையில் வெண்மதி என்பவருக்கு 227/4 என்ற சர்வே எண்ணில் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வெண்மதியின் கணவரும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒன்றிய செயலாளருமான வெங்கடேசன் என்பவர் வீட்டின் அருகே உள்ள காலி இடங்களையும், மழைநீர் வடிகால் வாய்களையும் ஆக்கிரமித்து சட்ட விரோதமாக வணிக வளாகம் கட்டி வாடகைக்கு விட்டுவருவதாகவும்,
இதனால் மழை காலங்களில் மழை நீர் செல்ல வழி இல்லாமல் குடியிருப்புகளை சூழ்ந்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இது சம்மந்தமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முற்பட்டபோது நடவடிக்கை எடுக்க விடாமல் அரசியல் பின்புலத்தை பயன்படுத்தி அதிகாரிகள் மிரட்டி வருவதாகவும் கூறுகிறார்கள்.
எனவே மாவட்ட ஆட்சியர் அந்த பகுதியில் ஆய்வு செய்து ஆக்கிரமித்து கட்டப்பட்ட வணிக வளாகங்களை அகற்றி, வீட்டு மனை இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு வீட்டு மனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் மனு அளித்தனர்.