ஆவடி அருகே இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் போதை வாலிபர்கள் பயணிகள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியதில் இரத்தம் சொட்ட சொட்ட முதியவர் அமர்ந்திருக்கும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஆவடி அருகே பட்டாபிராம், இந்து கல்லூரி ரயில் நிலையத்தை நாள்தோறும் சென்னை நோக்கி செல்வோரும் அரக்கோணம் நோக்கி செல்வோரும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று வழக்கம் போல பயணிகள் அரக்கோணம் மார்க்கமாக செல்வதற்காக ரயில் நிலையத்தில் உள்ள நடைமேடையில் காத்திருந்தனர். அப்பொழுது. போதையில் வந்த 5 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரயில் நடைமேடையில் இருந்த இரும்பு ராடு, டியூப் லைட் உள்ளிட்டவற்றை பிடிங்கி நடைமேடையில் ரயிலுக்காக அமர்ந்திருந்த பெரியவர்கள்,சிறுவர்கள், பெண்கள்,முதியவர்கள் என கண்ணில் பட்டவர்களையெல்லாம் சரமாரியாக தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதில் இரும்பு கம்பியால் முதியவரை தாக்கியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் சொட்ட,சொட்ட இருப்பதையும் கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனை அனுப்பி வைத்துள்ளனர்.
இதனால் பயணிகளிடையே அச்சம் எழுந்துள்ளது.போதை இளைஞர்கள் பொதுமக்களை தாக்கி அட்டூழியம் செய்யும் செல்போன் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து ஆவடி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து பொதுமக்களை தாக்கிய இளைஞர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இது குறித்து பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகையில்,’தமிழகத்தில் போதை பொருட்கள் நாளுக்கு, நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி என்ன செய்கிறோம் ரன்பது தெரியாமல் இதுபோன்று செயல்களில் ஈடுபடுகின்றனர்.
அரசு போதை பொருட்களை ஒழிக்க ஒருபுறம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் அதையும் மீறி இதைப்போன்ற சம்பவங்களும் நடக்கத்தான் செய்கின்றன.
அரசு அவபோது நடவடிக்கைகளை எடுத்தும் இந்த போதை பழக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், எனவே போதைப் பொருள் விற்கும் நபர்கள் மீது கடுமையாக நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும், இதுபோன்று செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.