திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கையாக பயிற்சி பெற்ற 8 மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு பருவ மழை தொடங்கயிருக்கும் நிலையில் திருவாருர் மாவட்டத்தில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதால் திருவாருர் மாவட்டத்தில் அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனால் தாழ்வான பகுதிகள் மற்றும் ஆற்று ஓரங்களில் வசிப்போர் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டால் அவர்களை உடனடியாக மீட்க திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின்படி மாநில பேரீடர் மீட்பு குழுவினரால் பயிற்சி பெற்ற காவலர்களை கொண்டு திருவாருர் மாவட்டத்தில் 8 மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
திருவாருர், நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை ஆகிய 5 உட்கோட்டங்களில் உதவி ஆய்வாளர்கள் தலைமையில் தலா ஒரு மீட்பு குழு வீதம் 5 மீட்பு குழுக்களும், திருவாருர் ஆயுதப்படையில் 3 மீட்பு குழுவினரும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் மீட்பு குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான பாதுகாப்பு மற்றும் மீட்பு பணிக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் திருவாருர் மாவட்ட ஆயுதப்படையில் வரிசைப்படுத்தப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகள் மற்றும் மீட்பு குழுவினருக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்.
மேலும், மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படுவோர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக கைபேசி எண்.9498100865 எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.