காஞ்சிபுரம் அருகே துக்க நிகழ்விற்கு வந்துவிட்டு வீடு திரும்ப சென்றபோது ஏற்பட்ட சாலை விபத்தில் தாய் மற்றும் மகன்கள் என மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் , ஓச்சேரி அடுத்த சின்ன சமுத்திரம் மலைமேட்டு பகுதியை சேர்ந்தவர் கஜலட்சுமி. இவர் திருப்புட்குழி கிராமத்தில் உள்ள உறவினர் ஒருவர் இறந்த நிலையில் அவரது நிகழ்வில் கலந்து கொள்ள தனது மகன்களான மனோஜ் மற்றும் மதன் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் திருப்புட்குழி கிராமத்திற்கு வந்துள்ளார்.
இறுதி சடங்கில் கலந்து கொண்டு பின் மீண்டும் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஓச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தபோது தாமல் காலணி அருகே எதிர்பாராத விதமாக முன்னே சென்ற சரக்கு லாரியை முந்தி செல்ல முயன்ற போது இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி சாலையில் கவிழ்ந்த போது சரக்கு லாரியின் பின் சக்கரம் ஏறி விபத்து ஏற்பட்டது.
விபத்துக் குறித்து அறிந்த பாலுசெட்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தபோது இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியும், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் 108 அவசர ஊர்தி மூலம் காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை மேற்கொண்டபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஓரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.