தொடர் கற்றலே சிறந்த.. புதியவைகளை அறிந்து கொள்ள உதவும் என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காஞ்சிபுரம் தனியார் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று பல்வேறு நிகழ்வுகளை பங்கேற்க காஞ்சிபுரம் வருகை புரிந்தார். காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயம் சங்கரமடம் உள்ளிட்டவைகளில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து ஸ்ரீ சங்கரா நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்து அங்குள்ள ஆதிசங்கர சிலைக்கு புஷ்பாஞ்சலி செய்து, அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் உள்ள ஓலைச்சுவடி பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தினை பார்வையிட்டார்.
மேலும் அங்கு உள்ள சில்ப்ப சாஸ்திர சிலைகள் மற்றும் மாணவர்களின் ஓவிய கலைத்திறன் படைப்புகளை பார்வையிட்டு அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் இடையே உரையாற்றினார்.
அதில் தொடர்ந்து கற்றல் மூலமே புதிய நிகழ்வுகள் மற்றும் பாரம்பரியம் உள்ளிட்டவைகளை அறிந்து கொள்ள முடியும்.
இங்கு வந்து பார்வையிட்டு கேட்டறிந்த போது தான் எனக்கு கிரந்தம் என்ற எழுத்து சமஸ்கிருதற்காக உருவாக்கப்பட்டது என அறிந்து கொண்டேன்.
இதுபோல அனைவரும் தொடர் கல்வியை கற்று மகிழ வேண்டும் எனவும் சங்கரா நிகழ்நிலை பல்கலைக்கழகத்தில் அனைத்து கலை, பொறியியல், ஆராய்ச்சி படிப்பு மற்றும் மேலாண்மை என பல கல்வியும் சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்படுவதால் இதை கல்விக் கோயில் என கூறலாம் என தெரிவித்தார்.
இந்த நிகழ்வின்போது பல்கலைக்கழக வேந்தர் குடும்ப சாஸ்திரி மற்றும் துணை வேந்தர் ஸ்ரீநிவாசு, பல்கலைக்கழக நிர்வாக உறுப்பினர்கள் பம்மல் விஸ்வநாதன், செல்லா விஸ்வநாத சாஸ்திரி பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.