Close
டிசம்பர் 5, 2024 2:32 காலை

முன்னாள் முதல்வர் நிகழ்ச்சிக்கு பணம் கேட்ட கவுன்சிலர் கணவர் : ஒப்பந்ததாரர் மீது அவதூறு செய்தி..!

காஞ்சிபுரம் மாநகராட்சி சார்பாக நாகலட்சுமி மேடு பகுதியில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடை ( கோப்பு படம்)

முன்னாள் முதல்வர் நிகழ்ச்சிக்கு பணம் கேட்ட கவுன்சிலர் கணவர்.. தர மறுத்ததால் அவதூறு செய்திகள் பரப்பும் அதிமுக நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஒப்பந்ததாரர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் நபர்கள் இறக்கும் தருவாயில் அவர்கள் உடலை நல்லடக்கம் செய்ய சாதாரண தகன மேடைகள் செயல்பட்டு வந்தது.

இந்நிலையில் சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக நவீன புதிய எரிவாயு தகன மேடை அமைக்க காஞ்சிபுரம் மாநகராட்சி நாகலத்துமேடு பகுதியினை தேர்வு செய்தது.

மேலும் 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான நமக்கு நாமே திட்டத்தின் கீழ் இதனை செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு,  இதற்காக ஒப்பந்த புள்ளி கூறப்பட்டு கடந்த நவம்பர் 2022 இல் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பணி ஆணை வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை அமைக்க நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.1.47 கோடி மற்றும் 60 லட்சம் பொதுமக்கள் பங்களிப்பு நிதி என தொடங்கப்பட்டது.

இந்நிலையில் இப்பணியில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும் பணிகள் நிறைவுறாமல் காலம் தாமதம் ஏற்படுவதாக 23 வது வார்டு மாமன்ற அதிமுக உறுப்பினர் புனிதாசம்பத் தனது கணவருடன் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தார்.

இது குறித்து செய்தித்தாள்களில் செய்தி வெளியான நிலையில் இப்பணியின் ஒப்பந்ததாரர் விஜயரகுநாதன் , இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் ( பொது) இது தொடர்பாக புகார் மனு அளித்துள்ளார்.

அம்மனுவில், காஞ்சிபுரம் மாநகராட்சியின் ஒப்பந்ததாரராக பல வருடங்களாக பணிபுரிந்து வருவதாகவும் , இக்காலத்தில் பல்வேறு சிறப்பு மிக்க பணிகளை திறம்பட குறிப்பிட்ட காலத்தில் பணிகளை முடித்து அரசுக்கு ஒப்படைத்துள்ளதாகவும் , தற்போது வரை அதில் எந்த குறைகளும் இல்லை என்பதும் அனைவரும் அறிந்தது.

இந்நிலையில் நாகலத்துமேடு நவீன தகன எரிவாயு மேடை பணிகள் நமக்கு நாமே திட்டம் பங்களிப்புடன் செயல்படுவதால் , பொதுமக்களின் பங்களிப்பு நிதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் , கடந்த மாதம் 23 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கணவர் அவர் சார்ந்த கட்சி பொது செயலாளர் நிகழ்ச்சி காஞ்சியில் நடைபெறுவதாகவும், அதற்கு ரூபாய் 50,000 பணம் தர வேண்டுமென கூறி தன்னிடம் கேட்டபோது , அதை தர மறுத்ததால் இது போன்ற பொய் புகார் அளித்து வருவதாகவும்,  தனது பணிக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top