தேசிய அளவில் நடைபெற்ற அறிவியல் கருத்தரங்கில் தென்காசி மாணவி சாதனை – தமிழக, கேரள எல்லையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேசிய அறிவியல் அருங்காட்சியகம் மற்றும் இந்திய அரசின் கலாச்சார அமைச்சகம் இணைந்து செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் அறிவியல் கருத்தரங்க போட்டியை மும்பையில் உள்ள நேரு அறிவியல் மையத்தில் நடத்தியது.
இந்த போட்டியில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 32 மாணவ, மாணவிகள் பங்கேற்ற நிலையில் தமிழகத்தில் இருந்து தென்காசி மாவட்டத்தை சேர்ந்த இலஞ்சி பாரத் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி மாணவியான ரச்னா என்ற மாணவி கலந்து கொண்டார்.
இந்த நிலையில், ரச்னா என்ற மாணவி தேசிய அளவில் நடைபெற்ற இந்த கருத்தரங்க போட்டியில் இந்திய அளவில் முதலிடம் பெற்று தமிழகத்திற்கும், தென்காசி மாவட்டத்திற்கும் தற்போது பெருமை சேர்த்துள்ள நிலையில், மாணவி ரச்னாவிற்கு, அவர் பயின்று வரும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
குறிப்பாக, மும்பையில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்கு விமானத்தின் மூலம் வந்த மாணவி ரச்னா அங்கிருந்து தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்த நிலையில், அவரை தமிழக-கேரளா எல்லைப் பகுதியான புளியரையில் வைத்து, பேண்ட் வாத்தியங்கள் முழங்க சக மாணவ, மாணவிகள் மற்றும் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்து அவரை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.