காஞ்சிபுரம் அருகே மின் இணைப்பை மாற்றி, மின் கட்டண முறையை மாற்றி தருவதற்கு 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி பொறியாளர், கம்பியாளர் கைது.காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை.
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் அடுத்த தாமல் கிராமத்தில் வசிப்பவர் பிரபாகர் வயது 28. இவரது தந்தை சம்பத் பெயரில் உள்ள வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டுவதற்கான பணிகளை துவக்கி உள்ளார்.
இந்த நிலையில் தந்தை சம்பத் வீட்டில் உள்ள மின் இணைப்பை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றவும் மின் கட்டண முறையினை மாற்றி வழங்கவும் கோரி தாமல் கிராமத்தில் உள்ள மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து உள்ளார்.
மின் இணைப்பு மீட்டரை மாற்றுவதற்கு அரசு நிர்ணயத்துள்ள கட்டணத்தை செலுத்திய நிலையில், மேற்கொண்டு பணிகளை செய்ய ரூபாய் 4000 லஞ்சம் வழங்க வேண்டும் என மின்வாரிய உதவி பொறியாளர் அசோக் ராஜ் கேட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து பிரபாகர் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.
பிரபாகர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார், டிஎஸ்பி கலைச்செல்வன் இன்ஸ்பெக்டர் கீதா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் தாமல் உதவி பொறியாளர் அலுவலகம் அருகில் மறைந்திருந்தனர்.
இதைத்தொடர்ந்து இன்று பிரபாகர் மின்வாரிய அலுவலகத்தில் உதவி பொறியாளர் அசோக் ராஜிடம் லஞ்சப் பணம் 4000 கொடுத்துள்ளார்.
அதனை உதவி பொறியாளர் வாங்கிக் கொள்ளாமல் அருகில் உள்ள கம்பியாளர் சாந்த மூர்த்தியிடம் வழங்க கூறியுள்ளார்.
லஞ்சப் பணத்தை சாந்த மூர்த்தி வாங்கிய நிலையில் திடீரென உள்ளே நுழைந்த காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் மற்றும் கம்பியாளர் சாந்தமூர்த்தி ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இருவரிடமும் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.