வங்க கடலில் உருவாகியுள்ள ஃபெங்கல் புயலின் தாக்கத்தால் கடலூர் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபெங்கல் புயலாக வலுப்பெற்றதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால் புயலாக வலுப்பெறாது என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் இயற்கையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே வலுவிழந்து கரையை கடக்கும் என கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது புயலாகவே கரையை கடக்கும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வானிலை மைய கணிப்புகளில் ஃபெங்கல் புயல் போக்கு காட்டி வருகிறது. இதனையடுத்து வங்க கடலில் உருவான இந்த புயல் நகரும் வேகம் அதிகரித்துள்ளது.
இந்த புயலினால் துறைமுகம் கடுமையான வானிலைக்கு உட்படும் என்பதை உணர்த்தும் வகையில் கடலூர் துறைமுகத்தில் 7ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.