Close
ஏப்ரல் 3, 2025 3:20 காலை

குற்றாலத்திற்கு ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் நிதி எங்கே?

ஏழைகளின் ஊட்டி, தென்னகத்தின் ஸ்பா, அருவிகளின் நகரம், என அழைக்கப்படும் குற்றாலம் தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இங்கு அமைந்துள்ள குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றருவி, வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குளிக்க அனுமதி இல்லாத செண்பகாதேவி அருவி, தேன் அருவி என பல அருவிகள் உள்ளது.

இங்கு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் பருவநிலை மாதங்கள் ஆகும். இந்தக் காலநிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் மழையால் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். அதே காலநிலையில் மிதமான வெயிலுடன்,மெல்லிய சாரல் மழையும் தென்றல் காற்றும் வீசும். இந்த பருவநிலை காலங்களை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றனர்.

அதேபோல் நவம்பர், டிசம்பர்,ஜனவரி ஆகிய மாதங்கள் ஐயப்ப பக்தர்கள் காலநிலை ஆகும். இந்த காலநிலையில் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களும், சபரிமலையில் இருந்து திரும்பும் ஐயப்ப பக்தர்களும் இங்குள்ள அருவிகளில் புனித நீராடி செல்வது வழக்கம்.

இந்த ஆறு மாத பருவ நிலை காலங்களில் தென்காசி,குற்றாலம், குடியிருப்பு, காசிமேஜர்புரம்,செங்கோட்டை, வல்லம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து அரசுக்கு நேரடியாகவும் மற்றும் மறைமுகமாகவும் வருடத்திற்கு அதிகமான வருவாயை கொடுத்து வருகிறது குற்றாலம்.

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு தேவையான எந்த ஒரு அடிப்படை வசதிகளும் சுற்றுலாத் துறை சார்பில் செய்து தரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குற்றாலம் பிரதான அருவி உட்பட எந்த அருவிகளிலும் அரசு சார்பில் உள்ள உடை மாற்றும் அறை இல்லை. இதனால் குற்றாலத்திற்கு குளிக்க வரும் பெண் சுற்றுலா பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

அதேபோல் குடிநீர் வசதி உட்பட எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. அதேபோல் இங்கு வரும் பயணிகளுக்கு தரமான உணவுகள் கிடைப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை ஐயப்ப பத்தர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசு சார்பில் உள்ள தங்கும் விடுதிகள் தரமற்ற இருந்த நிலையில் அதனை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் இதுவரை அஸ்திவாரப்பணிகள் கூட தொடங்கப்படவில்லை. தற்போது செயல்பாட்டில் இருக்கும் அரசு விடுதிகளில் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சூழ்நிலையில் குற்றாலத்தில் சுற்றுலா தகவல் மையம் மற்றும் அலுவலகம் எங்கே இருக்கின்றது என்று உள்ளூர் வாசிகளுக்கு கூட தெரியவில்லை. பேரூராட்சி சார்பில் குற்றாலம் மற்றும் ஐந்தருவி பகுதியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் மேல்நிலை நீர் தேக்க தொட்டி, மற்றும் குடிநீர் உரை கிணறு, குடிநீர் விநியோக விரிவாக்கம் ஆகிய பணிகள் நடைபெற்று வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ஐந்து கோடி ரூபாய் சுற்றுலா துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த நிதி இதுவரை பயன்படுத்தியிருந்தால் இங்கு உள்ள அனைத்து அடிப்படை தேவைகளும் பூர்த்தியா இருக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

உள்ளூர் முதல் வெளிநாடு வரை உள்ள அனைவரும் குற்றாலத்திற்கு வருவது வாடிக்கை. ஆனால் அவர்களது அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டியது தமிழக அரசின் கடமை. தற்போது உள்ள அரசை இதை கவனத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமா? என்பது பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்,ஐயப்ப பக்தர்கள் ஆகியோர்களின் கோரிக்கையாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top