Close
டிசம்பர் 5, 2024 2:20 காலை

பெங்கல் புயல்..! இன்று இந்த 7 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!

பெங்கல் புயல் -கோப்பு படம்

வங்கக் கடலில் இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று பிற்பகல் 2.30 மணி அளவில் புயலாக மாறியதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்தப் புயலுக்கு ‘பெங்கல்’ (Fengal) என்று பெயரிடப்பட்டுள்ளது.

நாகையில் இருந்து 260 கி.மீ தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 270 கி.மீ. தொலைவிலும், சென்னையில் இருந்து 300 கி.மீ. தொலைவிலும் மையம்கொண்டுள்ள பெங்கல் புயல் தற்போது மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்துவருகிறது.

இந்தப் புயல் இன்று (நவம்பர் 30ம் தேதி ) பிற்பகல், காரைக்கால் – மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

பெங்கல் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மேலும் இந்த வேகம் இடையிடையே மணிக்கு 90 கி.மீ. வேகத்திலும் சூறைக்காற்றாக வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பெங்கல் புயலால் சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டுகள் ஏற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு துறைமுகத்திலும், ஒவ்வொரு எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இன்று (30ம் தேதி) தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கன மழையும் ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்கல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று (30ம் தேதி) அதி கன மழைக்கான ‘ரெட் அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யுலாம்.

திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top