Close
ஏப்ரல் 3, 2025 4:23 காலை

பொன்னேரியில் கொட்டித் தீர்த்த கனமழை.. 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புதுந்த வெள்ளநீர்

பொன்னேரியில் கொட்டி தீர்த்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் காலை முதலே கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று நள்ளிரவு தொடங்கி மிதமாக பெய்த  மழை,  இன்று காலை முதல் கனமழையாக வெளுத்து வாங்கி வருகிறது.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய மழை காரணமாக பொன்னேரி சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. பொன்னேரி தாயுமான் செட்டி தெருவில் தாழ்வான பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் வீடுகளில் உள்ள பொருட்கள் சேதம் அடைந்துள்ளது.

இதனைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதாள சாக்கடை பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதாகவும் கால்வாய் அமைக்கும் பணிகள் காரணமாக மழை நீர் வெளியேற வழி இன்றி குறுகலான திருக்கழுக்குள் மழை நீர் புகுந்து வீடுகளுக்குள் மழை நீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மந்தகதியில் பாதாள சாக்கடை பணிகளை மேற்கொள்ளும் நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கு காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அப்புறப்படுத்தினர். தொடர்ந்து ஜேசிபி இயந்திரம் வரவழைக்கப்பட்டு கால்வாயில் உள்ள அடைப்பு அகற்றி மழைநீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே மழைநீர் வீடுகளுக்குள்ளும் கடைகளுக்குள்ளும் புகுந்ததால் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் தண்ணீரில் நனைந்து பாழாகியுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர்.

வீடுகளுக்குள் புகுந்துள்ள தண்ணீரை பாத்திரங்கள் பக்கெட்டுகளைக் கொண்டு இறைத்து வெளியே ஊற்றி வருகின்றனர். மழைநீர் புகுந்து பாதிப்பு ஏற்படுத்திய பகுதிகளில் பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் நேரில் பார்வையிட்டு மழை நீரை அப்புறப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top