பெங்கல் புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில், கனமழை பெய்து வரும் 7 மாவட்டங்களிலும் இன்று (1ம் தேதி) காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை 500 மருத்துவ முகாம்கள் நடத்தப்படவுள்ளதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் சென்னையில் 200 முகாம்கள், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 6 மாவட்டங்களில் தலா 50 மருத்துவ முகாம்கள் என்று மொத்தம் 500 முகாம்கள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த முகாம்களின் எண்ணிக்கையை தேவைக்கு ஏற்ப அதிகரிக்கவும் மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இந்த முகாம்களில் காய்ச்சல், சளி பரிசோதனை, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை அளவு போன்ற அடிப்படை பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கேற்ப மருந்துகளும் வழங்கப்படவுள்ளதாக கூறினார்.
காய்ச்சல், சளி மருந்துகள், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய்க்கான மருந்துகள், உப்பு – சர்க்கரை கரைசல், நிலவேம்பு குடிநீர், சேற்றுப்புண் மருந்து போன்ற அத்தியாவசிய மருந்துகளை தேவைக்கு அதிகமாகவே இருப்பு வைத்துக்கொள்ள மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மருத்துவ முகாம்கள் அரசு சார்பில் நடத்தப்படுவதால், பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் சென்று, தங்களது உடல்நிலையை பரிசோதித்துக் கொள்ளலாம்.