காஞ்சிபுரம் மாவட்ட செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளி செல்ல முடியாமல் தவிக்கும் மாணவர்களுக்காக இளையனார்வேலூர் பகுதியில் தற்காலிக பள்ளி நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்தில் மாகறல் மற்றும் வெங்கச்சேரி ஆற்றின் குறுக்கே செய்யாறு பாய்ந்து ஓடுகிறது.
பெஞ்சல் புயல் காரணமாக காஞ்சிபுரம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக செய்யாற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.
இந்நிலையில் ஆற்றின் கரையோரம் உள்ள நெய்யாடுபாக்கம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இளையனர் வேலூர் வள்ளிமேடு காவாந்தண்டலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஆறாம் வகுப்பு முதல் +2 வரை பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் செய்யாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பள்ளிக்கு செல்ல இயலாத நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் அறிவுரையின் பேரில் இளையனர் வேலூர் பகுதியில் கிராம சேவை கட்டிடத்தில் தற்காலிக பள்ளி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு வெள்ளப்பெருக்கின் போதும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்த நிலையில், தற்போது இதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளதாகவும், வருகிற ஆண்டில் இதற்கான நிதி பெற்று உயர்மட்ட பாலம் அமைக்க ஏற்பாடு செய்துள்ளதாகவும் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் கூறியுள்ளார்.
இது போன்ற உயர்மட்ட பாலம் கட்டி முடிக்கப்பட்டால் உத்திரமேரூரில் இருந்து வாலாஜாபாத்துக்கு குறைந்த நேரத்தில் செல்லவும், இப்பகுதிக்கு மிகுந்த போக்குவரத்து கிடைக்கும் எனவும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.