Close
டிசம்பர் 5, 2024 2:26 காலை

பெஞ்சல் புயலில் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் மணல் திட்டுக்களாக மாறிய சாலை..! வாகன ஓட்டிகள் அவதி..!

சாலையை மூடியுள்ள மணல்திட்டு

பழவேற்காடு அருகே கருங்காலி பழைய முகத்துவாரம் பகுதியில் ஃபெஞ்சல் புயல் தாக்கத்தால் கடல் சீற்றம் ஏற்பட்டு மணல் திட்டுக்களாக மாறிய சாலை. மணல் திட்டுக்களில் வாகனங்கள் சிக்கி அலுவலகம் செல்வோர் கடும் அவதி.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில் இருந்து காட்டுப்பள்ளி செல்லும் சாலை முற்றிலுமாக சேதம் அடைந்து வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

வடசென்னை அனல் மின் நிலையம், அதானி துறைமுகம், காமராஜர் துறைமுகம் என பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு பழவேற்காட்டில் இருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் பழவேற்காடு – காட்டுப்பள்ளி சாலை வழியே இரு சக்கர வாகனங்களில் பயணித்து வருகின்றனர்.

வழக்கமாக கருங்காலி பழைய முகத்துவாரம் பகுதியில் கடல் சீற்றம் ஏற்படும் காலங்களில் கடல் மணல் சாலைக்கு அடித்து வரப்படுவது வாடிக்கை. உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக பழவேற்காடு சுற்றுப்பகுதிகளில் கடல் கடும் சீற்றத்துடன் கொந்தளித்தது.

கருங்காலி பகுதியில் பழைய முகத்துவாரத்தில் கடல் சீற்றம் ஏற்பட்டு கடல் நீருடன் மணல் அடித்து வரப்பட்டு சாலை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. மணல் திட்டுக்களாக மாறி உள்ள சாலையில் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துடன் இருசக்கர வாகனங்களில் பயணித்து வருகின்றனர்.

சாலை முழுவதும் மணல் திட்டுக்களாக மாறிய நிலையில் இருசக்கர வாகனங்கள் சாலையை விட்டு அருகிலுள்ள மணலிலேயே சென்று வருகின்றன. மணலில் செல்லும் பொழுது இருசக்கர வாகனங்கள் சிக்கிக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

புயல் போன்ற பேரிடர் காலங்களில் கடல் சீற்றம் ஏற்படும் போது இதே பாதிப்பை சந்தித்து வருவதாகவும், மாற்றுப் பாதையில் சுமார் 40 கிலோமீட்டர் வரை சுற்றி செல்வதால் கால விரையமும் பொருட்செலவும் அதிகரிப்பதாகவும் வேதனை தெரிவித்தனர்.

போர்க்கால அடிப்படையில் சாலையில் குவிந்துள்ள மணல் திட்டுக்களை அப்புறப்படுத்தி வாகன போக்குவரத்திற்கு வழி ஏற்படுத்தித் தர வேண்டும் எனவும் நிரந்தர தீர்வாக உயர்மட்ட மேம்பாலம் கட்டித்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top