பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேசும்போது உறுதி அளித்துள்ளார்.
பெஞ்சல் புயல் கரையைக் கடக்கும்போது விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் காற்றின் வேகம் மணிக்கு 90 கி.மீ வேகத்தில் இருந்தது. இதனால் கொட்டித்தீர்த்த கனமழையில் சாலைகள் மற்றும் மின் இணைப்புகள் கடுமையாக சேதமடைந்தன.
தருமபுரி, கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் போன்ற உள் மாவட்டங்களிலும் கனமழை பெய்து சேதம் ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவில் பாறை உருண்டுவிழுந்து 7 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
புயலால் ஏற்பட்டுள்ள சேதங்களை தற்காலிகமாக சீரமைப்பதற்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 2,000 கோடி ரூபாய் நிதி வழங்கவேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.
இதற்கிடையே இன்று (3ம் தேதி) பெஞ்சல் புயல் பாதிப்புகள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டறிந்தார். அப்போது, புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு அனைத்து உதவிகளும் செய்யபப்டும் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
சமூக வலை தளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவு
சமூகவலைதளத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
பெஞ்சல் புயல் தமிழ்நாட்டில்ஏற்படுத்தி உள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் என்னைத் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். மாநில அரசு பேரிடர் பாதிப்புகளைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் பிரதமரிடம் தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி, புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள மத்திய குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன்.
தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை பிரதமர் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன். இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.