Close
டிசம்பர் 5, 2024 2:06 காலை

நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் கலெக்டர் நேரில் ஆய்வு..!

நாமக்கல் அருகே வள்ளிபுரத்தில், குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால், பாதுகாப்பாக பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள, நிவாரண முகாம்களை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல் :
நாமக்கல் மாவட்டத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

சேலம் மற்றும் ஏற்காடு பகுதிகளில் பெய்த கனமழையால், திருமணி முத்தாறில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா, பில்லூர், ராமதேவம் பஞ்சாயத்துக்களில் பல இடங்களில் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலங்களில் மழை வெள்ளம் புகுந்துள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டார்.

ஆய்வின்போது நீர் பிடிப்பு பகுதிகளின் மழை அளவு, தற்போதைய நீர் வரத்து உள்ளிட்ட விவரங்களை நீர்வள ஆதார துறையினரிடம் கேட்டறிந்தார். மேலும் பொது மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் பாதுகாத்திட தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் வருவாய்த் துறை மற்றும் ஊராட்சி துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

திருமணி முத்தாறில் தற்போது வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் சென்று கொண்டிருக்கிறது. எனவே, கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக, நாமக்கல் ஊராட்சி ஒன்றியம், வள்ளிபுரம் பஞ்சாயத்து, அண்ணா நகரில் கனமழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதை நேரில் பார்வையிட்டார். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக அருகிலுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு அவர்களிடம் கலந்துரையாடினார்.

மேலும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தாமதமின்றி வழங்கிடுமாறும், வெள்ள நீரை அப்புறப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வுகளில் நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் விஜயகுமார், தாசில்தார்கள் சீனிவாசன், முத்துக்குமார், பிடிஓக்கள் அசோகன், கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top