கடலூர் தென்பெண்ணையாற்று வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை நேரில் பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறினார். பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடலூரில் ஏராளமான கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.
உப்பளங்கள், இறால் பண்ணைகள் விவசாய விளைநிலங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நெற்பயிர்கள் சுமார் 5 அடி 6 அடி நீரில் மூழ்கியுள்ளது. மேலும் வீட்டில் இருந்த பொருள்கள் அனைத்தும் பெருமளவில் சேதடைந்துள்ளன.
மத்திய அரசு கணக்கின்படி உடமைகள் சேதமடைந்தால் ரூ.2,500, பாத்திரங்கள், மளிகை பொருட்கள் சேதம் அடைந்தால் ரூ.2,500, வீடுகளில் சிறிய அளவுகள் பாதிப்படைந்தால் ரூ.5,000 ஆக மொத்தம் ரூ 10,400 வழங்க வேண்டும்.
இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,000, அதற்கு மேல் பாதிக்கப்பட்டவர்களுக்க ரூ.5,400 வழங்க வேண்டும்.
எனவே பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ரூ.2,000 வழங்குவது என்று தமிழக அரசு அறிவித்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது.
எதிர்பார்க்காத அளவில் வானிலை மாற்றம் காரணமாக சாத்தனூர் அணையில் அதிக அளவு தண்ணீர் வந்துள்ளது. வினாடிக்கு 30 ஆயிரம் கன அடி திறக்கப்படுவதாக கூறியவர்கள் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீரென ஒரு லட்சத்து 68 ஆயிரம் கன அடி திறந்தது தான் இழப்பு ஏற்பட காரணமாக அமைந்தது.
தொலைக்காட்சியில் தெரிவித்து விட்டோம் என்கிறார்கள். நள்ளிரவு அதிகாலை நேரங்களில் யார் தூங்காமல் விழித்துக் கொண்டு தொலைக்காட்சியை பார்க்க முடியும்.
மத்திய அரசின் பாரதப் பிரதமரின் காப்பீடு திட்டத்தில் இதுவரை 80 சதவீத விவசாயிகள் மட்டுமே பதிவு செய்துள்ளனர். மீதமுள்ள 20 சதவீத விவசாயிகள் பதிவு செய்வதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவண்ணாமலையில் ஏற்பட்ட சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் நான் பார்த்ததில்லை வல்லுநர்கள் தான் இதற்கு என்ன காரணம் என்று கூற வேண்டும்.
வானிலை பற்றி துல்லியமாக கடந்த 10 ஆண்டுகளில் கூற எவ்வித வசதியும் கிடையாது. ஆனால் தற்பொழுது அனைத்து வசதிகளையும் பெறக்கூடிய சேட்டிலைட் நன்றாக உள்ளது. அதனால் துல்லியமாக கூற முடியும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் வினோத் செல்வம், அஸ்வத்தமன், மணிகண்டன், சாய் சுரேஷ், மேகநாதன், வேலு, வெங்கடேசன், கார்த்திகேயன், அக்னி கிருஷ்ணமூர்த்தி, ராமமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.