கடையம் அருகே வெறிநாய் கடித்து 20 க்கும் மேற்பட்டோர் அரசு மருத்துவமனையில் அனுமதி-வெறிநாய் தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் பல பகுதிகளில் வெறிநாய் தொல்லை அதிகமாக இருந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கடையம் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட நபர்களை வெறிநாய்கள் கடித்த குதறியதை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் வெறிநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து அலட்சியப் போக்கில் செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
இந்த நிலையில் தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி, பொட்டல்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வெறிநாய்கள் சுற்றி திரிந்து வந்துள்ளன. இதனை தொடர்ந்து இதை கட்டுப்படுத்த வேண்டும் என பல பலமுறை அப்பகுதி அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அந்தப் பகுதியில் இன்று நடந்து சென்ற நபர்களை குறி வைத்து வெறிநாய்கள் துரத்தி துரத்தி கடித்துக் கொதறி உள்ளது.
இதில் படுகாயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் கடையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் பலத்த காயமடைந்த சிலர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த வெறிநாய் தொல்லை காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கு மிகவும் அச்சப்பட்டு வருகின்றனர்.
வெறிநாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும், இந்த பகுதியில் சுற்றித் திரியும் வெறிநாய்களை உடனடியாக பிடித்து மாற்றுப் பகுதியில் கொண்டு விட வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு மீண்டும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.