அ.தி.மு.கவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து சமர்ப்பித்த விண்ணப்பத்தின் மீது முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் 4 வாரத்திற்குள் கேட்க வேண்டும்’ என்று தேர்தல் கமிஷனுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அவரது மனுவில் ‘அ.தி.மு.கவுக்குள் உட்கட்சி பிரச்னை இருப்பதால் இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்கவேண்டும் என்பது தொடர்பாக, முடிவெடுக்கக் கூடாது.
அ.தி.மு.கவின் உள்கட்சி விவகாரம் தொடர்பான உரிமையியல் வழக்குகள் முடிவு தெரியும் வரை அ.தி.மு.கவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று (4ம் தேதி) நீதிபதிகள் சுப்பிரமணியன், குமரப்பன் ஆகியோர் அமர்வுக்கு வந்தது. விசாரணையில் ‘அ.தி.மு.கவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு தெரிவித்து சமர்ப்பித்த விண்ணப்பத்தின் மீது முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் 4 வாரத்திற்குள் கேட்டு முடிவெடுக்க வேண்டும்’ என்று தேர்தல் கமிஷனுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.