காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு விதிமுறைகளை மீறி கனிமங்களை எடுத்துச் சென்ற 573 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள சிறு கனிம குத்தகை குறித்த விபரங்கள் அனைத்தும் http://mimas.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கனிம குவாரி குத்தகைதாரர்களும் இந்த இணையதளத்தில் பதிவு செய்து இணையதளம் வாயிலாக உரிய கட்டணங்கள் செலுத்தி விண்ணப்பித்து எடுத்துச் செல்லப்பட வேண்டும்.
கனிமத்திற்கு மொத்த இசைவாணை சீட்டினை இணையதளம் வாயிலாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளும் நடைமுறையும் கடந்த 9.5.2024 ஆம் தேதி முதல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் அச்சடிக்கப்பட்ட நடைச்சீட்டுகள் பயன்படுத்தப்பட்டு வருவதன் தொடர்ச்சியாக இணையதளம் வாயிலாக பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய நடைச்சீட்டுகளை கனிம வளத்துறையின் மூலம் விரைவில் முழுமையாக செயல்படுத்த அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கனிம கடத்தல், அதிகபாரம் ஏற்றி செல்லுதல், தார்பாய் கொண்டு மூடாமல் செல்லுதல் ஆகியனவற்றை முற்றிலும் கட்டுப்படுத்திட காஞ்சிபுரம் மற்றம் திருவண்ணாமலை மாவட்ட குவாரி, கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர்களுடன் ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் ஆகியோர்களால் பலமுறை கலந்தாய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
இக்கூட்டங்களின் வாயிலாக உரிய அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை, காவல்துறை,போக்குவரத்துத்துறை, கனிமவளத்துறை அலுவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கி வாகனம் கைப்பற்றுதல் குறித்த விபரங்களும் வாரம் தோறும் ஆட்சியரால் மதிப்பாய்வு செய்யப்பட்டும் வருகிறது.
இந்த நிதியாண்டில் மட்டும் உரிய அனுமதியில்லாமல் கனிமம் எடுத்து சென்ற 55 வாகனங்கள் மற்றும் அதிக பாரம் ஏற்றிச் சென்ற 518 வாகனங்கள் உட்பட மொத்தம் 573 வாகனங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதுடன் விதிமுறைகளின்படி உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே குவாரி,கிரஷர் மற்றும் லாரி உரிமையாளர் சங்கங்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி விதிகளை முழுமையாக பின்பற்றி உரிய முறையில் கனிமங்கள் கொண்டு செல்ல வேண்டும்.
தவறினால் மாவட்ட நிர்வாகத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆட்சியர் கலைச்செல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.